×
Saravana Stores

சென்னையிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு 97சி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்: பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை

ஆவடி, செப். 29: திருத்தணி முருகன் கோயிலுக்கு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட பேருந்து 97சி மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை பாரிமுனையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர் வழியாக 5 படை வீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல தடம் எண் 97சி அரசு பேருந்து இயக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட இந்த பேருந்தானது, பாடி சிவன் கோயில், திருமுல்லைவாயல் சிவன் கோயில், பச்சையம்மன் கோயில், திருநின்றவூர் பெருமாள் கோயில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் என 89.1 கி.மீ., தூரத்திற்கு கோயில் நகரங்களை இணைத்து பயணித்து வந்தது. இதன் வாயிலாக பக்தர்கள் மட்டுமின்றி மேற்கூறிய வழித்தடங்களில் உள்ள நகரவாசிகளும், பள்ளி, கல்லூரி மாணவியரும், சிறு வியாபாரிகள் பயனடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 2004க்கு பின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வழியாக திருத்தணி வரை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் மோசமான சாலையை காரணம் காட்டி அவை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி வழியாக திருத்தணி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், ஆவடி, அம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோயம்பேடு அல்லது பூந்தமல்லி சென்று பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி செல்ல நாள் ஒன்றுக்கு 11 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, பண்டிகை நாட்களில், திருத்தணி முருகன் கோவிலுக்கு குறித்த நேரத்தில் சென்று வர முடியாமல் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தனியார் கார்களில் திருத்தணி கோயில் செல்ல குறைந்த பட்சம் ₹2400 வரை செலவாகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் ‘வெயிட்டிங் சார்ஜ்’ சேர்த்தால், போக்குவரத்துக்காக மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் செலவாகிறது.
சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலை பொறுத்தவரை, குறைந்த பட்சம் 230 மீட்டரில் இருந்து 2.5 கி.மீ. தொலைவில் ரயில் நிலையங்கள் உள்ளன. எனவே சென்னை – ஆவடி – திருத்தணி வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், ஆவடியில் இருந்து திருத்தணிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆன்மிக சுற்றுலா
தமிழக அரசு ஆன்மிக சுற்றுலாவை அறிமுகப்படுத்தி வருகிறது. இதற்கு மக்களிடம் மிகப்பெரும் அளவில் வரவேற்பு உள்ளது. இந்த 97சி பேருந்து கூட ஒரு வகையில் ஆன்மிக சுற்றுலா பேருந்தாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களை ஒருங்கிணைத்துச் செல்கிறது. இந்த பேருந்தை மீண்டும் இயக்குவது என்ற கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், ஆன்மிக சுற்றுலா போல் சிறப்பு நாட்களில், சிறப்புக் கட்டணத்தில் எல்லா ஆன்மிகதலத்திலும் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில் இதை செயல்படுத்தலாம் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post சென்னையிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு 97சி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்: பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruthani Murugan Temple ,Chennai Parimuna ,Ampathur ,Avadi ,Tiruvallur ,Tiruthani ,Dinakaran ,
× RELATED சென்னை பாரிமுனையில் பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது