- காஷ்மீர்
- இந்தியா
- ஐ.நா.
- ஐக்கிய நாடுகள்
- அயோனா பொது சட்டமன்றம்
- நியூயார்க்
- பாக்கிஸ்தான்
- ஷெபாஸ் ஷரீப்
- பாக்
ஐக்கிய நாடுகள் சபை: ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் பேசியதற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 79வது கூட்டத் தொடரின் பொது விவாதம் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வழக்கம் போல் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார்.
இதற்கு பதிலடி கொடுத்து, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பவிகா மங்களநாதன் ஐநா பொதுச் சபை விவாதத்தில் பேசியதாவது:
இந்த சபை வருந்தத்தக்க கேலிக்கூத்தை கண்டது. தீவிரவாதம், போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு உலகளாவிய நற்பெயரைக் கொண்ட, ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை தாக்கும் துணிச்சலைக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தனது அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியதை இந்த உலகமே அறியும். 2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2008ல் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என பாகிஸ்தானுக்கு எதிரான பட்டியல் நீளமானது.
இத்தகைய நாடு, வன்முறை பற்றி எந்த இடத்தில் பேசினாலும் அது அப்பட்டமான பாசாங்குத்தனம்.உலகெங்கிலும் நடந்த தீவிரவாத சம்பவங்களில் பாகிஸ்தானின் கைரேகை படிந்திருக்கிறது. அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு நீண்டகாலமாக விருந்தளித்து வந்த தேசம் அது. அதன் பிரதமர் பேசிய வார்த்தைகள் எவ்வளவு ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதை இங்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவின் பிரிக்க முடியாத, ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தல்களை சீர்குலைக்க தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்துகிறது.
இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய தீவிரவாதம், மோசமான விளைவுகளை வரவேற்பது போன்றது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி appeared first on Dinakaran.