×
Saravana Stores

உச்சிப்புளி அருகே நதிப்பாலம் கீழே கருவேல மரங்களால் கரையும் வைகை ஆறு: பருவமழைக்கு முன் தூர்வார மக்கள் கோரிக்கை

மண்டபம், செப். 28: உச்சிப்புளி அருகே பனைக்குளம் சாலையில் அமைந்துள்ள நதிப்பாலம் ஆற்றின் கீழே நீர்நிலைகளை அழிக்கும் வகையில் குட்டி தீவு போல் அமைந்துள்ள கருவேல மரங்களை அகற்றி ஆற்று பகுதியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிவு சாலையில் பனைக்குளம் கிராமத்திற்கு செல்லும் வழியில் நதிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழே மேற்கு பகுதியில் பாலம் முதல் ராமநாதபுரம் வரை மணல் பரப்புடன் கருவேல மரங்கள் மற்றும் இதரச் செடிகள் வளர்ந்து குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் வீணாகிறது. எனவே, பருவ மழைக்காலங்களை கருத்தில் கொண்டு வரும் நவம்பர், டிசம்பர் மாதத்திற்குள் கருவேல மரங்களை அகற்றுவதற்கும்,

ராமநாதபுரம் முதல் ஆற்றங்கரை வரை வழிந்து வரும் வைகை ஆற்றின் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதற்கும், நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் அப்பகுதியை ஆழப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: மதுரையிலிருந்து வழிந்தோடி வரும் வைகை ஆற்றின் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தேக்கமடைவதற்கு ஆழப்படுத்த வேண்டும். அதுபோல ஆற்றின் இரண்டு பகுதிகளிலும் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும். ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வளர்ந்துள்ள கருவேலம் மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும். அதுபோல கடலில் வைகை ஆற்றின் தண்ணீர் அதிக அளவு கலக்காத அளவிற்கு பாதுகாத்திட நீர்த்தேக்க குளங்கள் அமைக்க வேண்டும், என்றனர்.

The post உச்சிப்புளி அருகே நதிப்பாலம் கீழே கருவேல மரங்களால் கரையும் வைகை ஆறு: பருவமழைக்கு முன் தூர்வார மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Taurwara ,Aattu ,Panaikulam Road ,Uchipuli ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED பனைக்குளம் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கால்நடைகள்