×
Saravana Stores

ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

* வேலை தேடி அலைந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் மக்கள் பாராட்டு
* முதல்கட்டமாக டாடா கார் தொழிற்சாலைக்கு முதல்வர் இன்று அடிக்கல்

தமிழ்நாடு முழுவதும் பிறந்த குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், குடும்ப பெண்கள், முதியவர்கள் என்று ஒவ்வொரு தனி மனிதனுக்குமான ஆட்சியாகவும், இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை பார் போற்றி வருகிறது. இப்படி பல்வேறு முன்னோடி திட்டங்கள் கொண்டு வந்த நிலையில் வடஆற்காடு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிப்காட் தொழிற்பேட்டையும் தற்போது அமைய உள்ளதால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. காரணம், வட ஆற்காடு மாவட்டமாக இருந்த வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கல்வி பயிலும் இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை இருந்து வருகிறது.

தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனிகள் இருந்தாலும், பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. எனவே ராணிப்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலைக்கு வெளியூர் செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி, பனப்பாக்கம், அகவலம், துறையூர், நெடும்புலி, மேலப்புலம், பெருவளயம், உளியநல்லூர், வெளிதாங்கிபுரம், சயனபுரம், சிறுவளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் ேவலை தேடி அலையும் நிலைதான் இருந்து வந்தது. இதில் இளைஞர்கள் வெளியூர்களுக்கு வேலை தேடி சென்றாலும், படித்து முடித்த பெண்கள் வேலைக்கு செல்லாமல் தான் இருந்து வருகின்றனர். கல்வி இருந்தும் வேலைவாய்ப்புக்காக அலைய வேண்டிய நிலை இருந்து வந்த கடினமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்து தீர்வு கிடைக்க உள்ளது.

சிப்காட் தொழிற்பேட்டைக்காக அகவலம், துறையூர், நெடும்புலி, பெருவளையம் ஆகிய 4 கிராமங்களில் இருந்து இத்திட்டத்திற்கான இடம் கண்டறியப்பட்டது. சிப்காட் தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, அவ்விடத்தில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 28ம் தேதி சனிக்கிழமை காலை நேரடியாக வருகை புரிந்து கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.  வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பானதாகவும், பிடித்தமானதாகவும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி கார் கம்பெனியான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு வகையான கார் உற்பத்தியை இங்கு தொடங்க உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் போன்ற சொகுசு கார்களை இந்த தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது. இதற்காக இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ9ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இந்த கார் தொழிற்சாலையில் எலக்ட்ரானிக்ஸ் சொகுசு கார்களும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த வகையான கார்களுக்கான உதிரிபாகங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து, இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் ஒன்றிணைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள தொழிற்சாலையில் கார்களின் அனைத்து பாகங்களும் இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எலக்ட்ரிக் கார்கள் மட்டுமின்றி இங்கு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இங்கு தயாரிக்கும் வாகனங்கள் உள்நாட்டில் விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான தொழிற்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு, விரைவாக தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வர உள்ளது. அதேபோல், 250 ஏக்கரில் காலணி தொழிற்சாலை ரூ400 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இளம்பெண்கள் என்று நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

தமிழகம் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சியில் புதிய இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ளதால் அனைத்து தரப்பினரிடையே இத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் எதிர்வரும் காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு வர உள்ளதால் ராணிப்பேட்டை மட்டுமின்றி பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. வேலை ேதடி அலைந்த இளைஞர்களுக்கும், கல்வி பயின்று முடித்த இளம்பெண்களுக்கும் இனி வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தமிழக முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

The post ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Shipcat Labour Bunga ,Ranipetta ,Tata Car Factory ,Tata Car ,Adikal ,Tamil Nadu ,Ciphkot ,Employpunga ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி...