×
Saravana Stores

ராணுவ பலத்தை பெருக்கி விட்டது; ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா திட்டம்: ஐநா சபையில் பாக். பிரதமர் அலறல்

ஐநா சபை; ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா தனது ராணுவ பலத்தை பெருக்கி விட்டதாக ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா தனது ராணுவத் திறனை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெற வேண்டும். முஸ்லிம் மக்களை அடிபணியச் செய்து அதன் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழிக்க இந்தியா முயற்சி செய்கிறது. பாலஸ்தீன மக்களைப் போலவே ஜம்மு காஷ்மீர் மக்களும் தங்களின் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்காக ஒரு நூற்றாண்டு காலமாகப் போராடி வருகிறார்கள்.

எனவே காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த இந்தியாவின் ஒருதலைப்பட்ச, சட்டவிரோத நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும். அங்கு அமைதியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக, ஐநா பாதுகாப்பு சபை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழிகளில் இருந்து இந்தியா விலகியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இன்னும் கவலையளிக்கும் வகையில், பாக்கிஸ்தானுக்கு எதிராக முக்கியமான இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அதன் ராணுவ திறன்களை பெருமளவில் விரிவுபடுத்துவதில் தற்போது இந்தியா திடீரென ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் திடீர் தாக்குதலையும், அணுசக்தியை கையில் வைத்துக்கொண்டு அதன் கீழ் ஒரு வரையறுக்கப்பட்ட போரையும் நடத்த இந்தியா முடிவு எடுத்துள்ளது. ஏனெனில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றப்போவதாக அடிக்கடி இந்தியா கூறி வருகிறது.

அப்படி செய்தால் இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிகவும் தீர்க்கமாக பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய வெறுப்பின் மிகவும் ஆபத்தான வெளிப்பாடாக இந்தியாவில் இந்து மேலாதிக்கம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 20 கோடி முஸ்லிம்களை அடிபணியச் செய்யவும், இந்தியாவின் இஸ்லாமிய பாரம்பரியத்தை அழிக்கவும் தீவிரமாக முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ராணுவ பலத்தை பெருக்கி விட்டது; ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற இந்தியா திட்டம்: ஐநா சபையில் பாக். பிரதமர் அலறல் appeared first on Dinakaran.

Tags : India ,UN Council ,Pakistan ,Shebaz Sharif ,Kashmir ,UN ,Shahbaz Sharif ,United Nations General Assembly ,Prime ,
× RELATED ஐநாவில் பாக். தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு