தோகைமலை, செப்.28: கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் நேற்றிரவு 9.30 மணி அளவில் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கோடை வெயில் போல் அனைத்து பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் மானாவரி சாகுபடியை ஏற்கனவே தொடங்கினர்.
இதில் எள், கடலை, துவரை போன்ற பல்வேறு மானாவாரி பயிர்களை விதைக்கத் தொடங்கினர். இதேபோல் தற்போது சம்பா சாகுபடிக்கான நடவு பணிகளும் பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் தீவிரமாக நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை தொடர்ந்து வெயில் கொளுத்தியது. மழையை இந்த நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் தோகைமலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது, இதனை அடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மேலும் மானாவரி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post தோகைமலை ஒன்றிய பகுதிகளில் 1 மணிநேரம் பலத்த மழை appeared first on Dinakaran.