- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- லோக்ஆயுக்தா
- பெங்களூரு
- மைசூர் லோக்ஆயுக்தா
- மைசூர் நகராட்சி வளர்ச்சிக் கழகம்
- முடா
பெங்களூரு: நில முறைகேடு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) முதல்வர் சித்தராமையாவின் மனைவியின் பெயரில் இருந்த நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததை, கர்நாடக உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய லோக் ஆயுக்தா போலீஸ் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், லோக்ஆயுக்தா போலீசார் முதல்வர் சித்தராமையா மீது நேற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் முதல்வர் சித்தராமையா மீது இபிகோ மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டம், கர்நாடக நில அபகரிப்பு தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சித்தராமையா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சித்தராமையாவின் மனைவி பார்வதி 2வது குற்றவாளியாகவும், சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி 3வது குற்றவாளியாகவும், நிலத்தை விற்ற தேவராஜு 4வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ விசாரணை வேண்டும்
மைசூருவை சேர்ந்த சினேகமாயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை விசாரித்து மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் தான், முதல்வர் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் சித்தராமையா மீதான மூடா மாற்று நில முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சினேகமாயி கிருஷ்ணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்த வழக்கை மாநில காவல் துறை விசாரிக்க முடியாது என்றும், அதனால் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அப்படியில்லை என்றால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
The post நிலம் முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு: லோக்ஆயுக்தா போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.