×

எங்கே போகிறது இளைய சமுதாயம் காவலரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது: மாணவர்களை நல்வழிப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: எழும்பூரில் ஆயுதப்படை காவலர் ஒருவரிடமும், மற்றொரு இடத்தில் இன்ஜினியரிங் மாணவனை தாக்கி செல்போன் மற்றும் 2 சவரன் செயினை பறித்த வழக்கில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மாணவர்களை நல்வழிப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் சமீபகாலமாக போக்சோ சட்டம், திருட்டு, கொலை, கொள்ளை, வழிபறி, அடிதடி போன்ற வழக்கில் 10 பேர் சிக்கினால், அதில் குறைந்தபட்சம் 2 பேராவது கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களாக இருந்து வருகின்றனர். அதுவும் கொரோனா கால விடுமுறைக்கு பிறகு கல்வி நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட ஒரு மாணவனை, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 3 மாணவிகள் நண்பர்கள் மூலம் கொலை செய்து, கைதான சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தற்போது நடந்த சம்பவம் அதை உறுதிபடுத்தி உள்ளது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் லிட்டின்ஜான்(22). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை லிட்டின்ஜான் டிரஸ்ட்புரம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது 2 மர்ம நபர்கள் லிட்டின்ஜானை வழிமறித்து கடுமையாக தாக்கி செல்போன் மற்றும் அவர் அணிந்து இருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டு மாயமாகிவிட்டனர்.இதில் படுகாயமடைந்த அவர், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று 2 மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையே சென்னை எழும்பூர் காந்தி ஈர்வின் சாலையில் நின்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் (32), என்பவரிடம் செல்போன் பறித்து கொண்டு பைக்கில் தப்பினர். இவர்களை பிடிக்க சென்னை முழுவதும் போலீசார் உஷார்படுத்ப்பட்டனர். இதற்கிடையே அண்ணாசதுக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கோடம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவனிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதில், புதுப்பேட்டையை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் மவுலி(22) மற்றும் கோகுல்(19) என தெரியவந்தது. கோகுல் கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர் மவுலியுடன் சேர்ந்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன், 2 சவரன் செயின் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்தனர். எனவே, மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களை பெற்றோர் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்….

The post எங்கே போகிறது இளைய சமுதாயம் காவலரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது: மாணவர்களை நல்வழிப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Armed Force Guard ,Elmampur ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...