மும்பை: 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் ஏலம் டிசம்பரில் நடைபெறலாம் என தெரிகிறது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் போட்டிகளின் எண்ணிக்கை 74ல் இருந்து 84ஆக அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஏற்கனவே 2025-26ம் ஆண்டு போட்டிகள் எண்ணிக்கை 84 ஆகவும், 2027ல் 94 ஆகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அடுத்த ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது எனவும், கடந்த ஆண்டைபோல 74 போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் நடைபெற இருப்பதால், வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு கூடுதல் போட்டிகளை நடத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் 2025ல் 84 போட்டிகளை நடத்த நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. ஏனெனில் போட்டிகளின் அதிகரிப்பு காரணமாக வீரர்களின் சுமையை நாங்கள் காரணியாகக் கொள்ள வேண்டும். இது (84 போட்டி) ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், 74 அல்லது 84 போட்டிகளை ஏற்பாடு செய்வதா என்பதை பிசிசிஐ இறுதி முடிவு செய்யும்’’ என்றார்.
The post ஐபிஎல்லில் போட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பா? பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேட்டி appeared first on Dinakaran.