×

₹5 ஆயிரம் அபராதம் செலுத்த முன்வராததால் சாலைகளில் பிடிபட்ட 8 மாடுகள் இன்று பொது ஏலம்

*வந்தவாசி நகராட்சி அறிவிப்பு

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அங்குள்ள அச்சரப்பாக்கம் சாலையில் காய்கறி வாங்க குழந்தைகளுடன் செல்லும் பெண்களை மாடுகள் முட்டி தள்ளுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, நகராட்சி சார்பில் கடந்த 23ம் தேதி முதல் மாடுகளை பிடிக்கும் பணி நடந்தது. ஏற்கனவே பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு அபராத தொகையாக ₹2,000 விதிக்கப்பட்டது.

ஆனால், அபராத தொகை செலுத்திய பிறகு சில நாட்களுக்கு மட்டுமே மாடுகளை உரிமையாளர்கள் தங்களது கட்டுபாட்டில் வைத்துக்கொண்டு, மீண்டும் பழையபடி சுற்றித்திரிய விடுவதால் மாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராத தொகை ₹5,000ஆக உயர்த்தப்பட்டது. எனவே, மாட்டின் உரிமையாளர்கள் அபராத தொகை செலுத்தி மாடுகளை மீட்காமல் இருந்தனர். பின்னர், பிடிக்கப்பட்ட மாடுகளை நகராட்சி அலுவலக முன் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் கட்டி வைத்து வைக்கோல் மற்றும் தண்ணீர் காட்டி வந்தனர்.

நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கையால், கடந்த 23ம் தேதி 5 மாடுகள் பிடிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு மாட்டின் உரிமையாளர் மட்டும் ₹5,000 அபராதம் செலுத்தி மாட்டை மீட்டு சென்றார். மீதம் 4 மாடுகள் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் நகராட்சி ஊழியர்கள் மேலும் 6 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகம் கொண்டு வந்தனர். பிடித்து சென்ற மாடுகளை நகராட்சி நிர்வாகம் விட்டு விடுவார்கள் என அதன் உரிமையாளர்கள் காத்திருந்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் மாலை நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்த விளம்பர பலகையில், நகராட்சி சார்பில் பிடிக்கப்பட்ட மாடுகளை யாரும் உரிமை கோர முன்வராததாலும், அபராத தொகை செலுத்தாததாலும் இந்த மாடுகளை தாசில்தார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பொது ஏலம் இன்று (27ம் தேதி) விடப்படும் என கூறியிருந்தனர்.
இதனால் மாட்டின் உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். தொடர்ந்து, நேற்று 2 மாடுகளை தலா ₹5 ஆயிரம் அபராதம் செலுத்தி அதன் உரிமையாளர் மீட்டு ெசன்றனர். மீதம் 8 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை இன்று பொது ஏலத்தில் விடப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கீதா கூறுகையில், மாட்டின் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தும், நேரடியாக எச்சரிக்கை செய்தும், உரிமையாளர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமல் சாலையில் திரிய விடுகின்றனர். இந்த மாடுகளை பிடிக்க நகராட்சி ஊழியர்களை குறைந்தது 10 ஊழியர்களை பயன்படுத்தினால்தான் முடிகிறது. அதன்பிறகு வேறு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் துப்புரவு பணி பாதிப்புக்குள்ளாகிறது.

இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த அரசின் விதிப்படி பொது ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாசில்தார், போலீசாருக்கு முறையான தபால் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று(27ம் தேதி) காலை 10 மணிக்குள் அபராத தொகை செலுத்தி மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை மீட்டு செல்லவில்லை என்றால் பொது ஏலம் விடப்படும். பின்னர், அந்த தொகை நகராட்சி பொது நிதியில் சேர்க்கப்படும் என்றார்.

The post ₹5 ஆயிரம் அபராதம் செலுத்த முன்வராததால் சாலைகளில் பிடிபட்ட 8 மாடுகள் இன்று பொது ஏலம் appeared first on Dinakaran.

Tags : Vandavasi Municipality ,Vandavasi ,Tiruvannamalai District ,Acharappakkam road ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல்...