×

சமூக வலைதளங்களில் திடீரென பிரபலமான அருள்வாக்கு பெண் சாமியாருக்கு வலை: புத்தாண்டு நிகழ்ச்சிக்கு தடை; போலீசார் அதிரடி

சென்னை: தமிழகத்தில் அன்னபூரணி அருள்வாக்கு வழங்க போவதாக பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இவர் யார் என அறிய முற்பட்டபோது, கடந்த 2014ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர், அரசு என்பவருடன் தனியாக குடித்தனம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிகழ்ச்சி முடிவில், தனது கணவரையும், 14 வயது பெண் குழந்தையையும் பிரிந்து அரசு என்பவருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஈரோடு பகுதியில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து மர்மமான முறையில் அரசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, அன்னபூரணி, தனது காதலனான அரசுவின் உருவ சிலையை வடித்து சிலகாலம் வழிபட்டு வந்துள்ளார். பின்னர், அன்னபூரணி தொண்டு நிறுவனம் என்ற அறக்கட்டளையை அந்த பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ‘அன்னபூரணி தன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் அருள் உரை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னபூரணி, புத்தாண்டில் புது பொலிவுடன் அறிமுகமாக திட்டமிட்டிருந்தார். இதற்காக ‘‘அம்மாவின் திவ்ய தரிசனம்’’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கூட் ரோடு அருகே உள்ள வல்லம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘தாயின் பாத கமலங்களில் தஞ்சமடைவோம்’ என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், அன்னபூரணி கால் வைக்கும் இடம் முழுவதும், பெண் பக்தர்கள், மலர்களை தூவி மலர் பாதை அமைத்து வழி ஏற்படுத்துகின்றனர். மேலும் அன்னபூரணி உருவம் பதித்த புகைப்படங்களும் நிறைய உள்ளது. ‘சரணம் சரணம் அம்மா, நீ வரணும் வரணும் அம்மா’, ‘சித்தரின் உருவங்களில் சித்துக்கள் செய்பவளே சரணம்’ என்ற பாடலும் பின்னணியில் ஓடி கொண்டிருக்கிறது.இதையடுத்து சில பெண்கள் அவருக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்கள். மேலும் சில பெண்கள் அவரை வணங்கியபடி சாமி வந்தது போல் ஆடுகிறார்கள். ஆண் பக்தர்கள்கூட அம்மாவின் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்கிறார்கள். அரியணையில் அமர்ந்திருக்கும் அம்மனுக்கு பின்னால் இருந்து மயில் இறகு வீசப்படுகிறது. அம்மாவிடம் காலில் விழுந்து வணங்கி விட்டு செல்லும் அனைத்து பக்தர்களும் அம்மாவின் உருவப்படம் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.இதற்கு முன்னதாகவும் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலந்தாங்கல் பகுதியில் கடந்த 19ம் தேதி அன்னபூரணியின் திவ்ய தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில்தான் புத்தாண்டு அன்று புதுப்பொலிவுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அவர்களிடம் கேட்டபோது, ‘இந்நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை. அதனால், நாங்களும் அனுமதி வழங்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நபர் தன்னுடைய தொலைபேசி எண் கொடுத்து திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட காவல் துறையினரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம்’ என்றனர்.ஈரோடு காவல்துறையினரும் அன்னபூரணி தேடி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் தடை விதித்திருப்பதால் அன்னபூரணி, தனது பக்தர்களுக்கு காட்சி கொடுக்க முடியாத சூழலில் சிக்கியுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவரது தொலைபேசி தொடர்பு எண்களையும்  நீக்கியுள்ளனர். இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று செங்கல்பட்டில் உள்ள மகாலில் நடைபெற இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அன்னபூரணி தரப்பில் விசாரிக்க முற்பட்டபோது, அவர் மற்றும் அவரின் நிர்வாகிகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவர் தலைமறைவாகி விட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசாரிடம் கேட்டபோது, ‘‘அவரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில், இது குறித்து, விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்.’’ என்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்னபூரணி குறித்த வீடியோ வைரலானதால், சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவரது தொலைபேசி தொடர்பு எண்களும் நீக்கப்பட்டது….

The post சமூக வலைதளங்களில் திடீரென பிரபலமான அருள்வாக்கு பெண் சாமியாருக்கு வலை: புத்தாண்டு நிகழ்ச்சிக்கு தடை; போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Arulvakku ,Chennai ,Facebook ,Twitter ,WhatsApp ,Annapurani Arulvok ,Tamil Nadu ,New Year ,
× RELATED பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக...