சென்னை: சைபர் அரெஸ்ட் சட்டத்தில் கைது செய்ததாக கூறி ரூ.1.15 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சீனிவாசவர்மா என்பவர் செல்போன் எண்ணிற்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வாட்ஸ் அப்பில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், மும்பை இணைய வழி குற்றப்பிரிவில் இருந்து பேசுகிறோம். தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பணபரிவர்த்தணைகள் நடந்துள்ளது. உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை அழுத்தவும் உங்களுக்கு தகவல் வரும் என்று சீனிவாசவர்மாவிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 0 எண்ணை அழுத்தியவுடன் மறுமுனையில் அறிமுகம் இல்லாத நபர் உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் மேல் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றால், கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பல தவணைகளாக ரூ.1.15 கோடி செலுத்தி உள்ளார். அதன்பிறகு தான் பணம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 1930யை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் வின் பவர் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் எஸ்பிஐ வங்கி கணக்கிற்கு பணம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அந்நிறுவனத்தின் வங்கி கணக்கை பயன்படுத்தி வரும் இயக்குநர்களான விஸ்வநாதன் (54), ஜெயராமன் (57), சுனில் குமார் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் வங்கி கணக்கில் உள்ள ரூ.52 லட்சம் முடக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டது.
எனவே பொதுமக்கள் மின்னஞ்சல்கள், இணையதள இணைப்புகளை கவனமாக கையாளுங்கள், நம்முடைய ரகசிய தகவல்களை பகிர்ந்து ஏமாற வேண்டாம். தொலைபேசி அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டாம். சமூக ஊடகங்கள் அல்லது பாதுகாப்பற்ற தளங்களில் முக்கியமான தகவலை பகிர்வதை தவிர்க்கவும். சைபர் அரெஸ்ட் என்பது சட்டத்திலேயே இல்லை. சைபர் கைது என்று எவராவது கூறினால் அது நிச்சயமாக ஒரு மோசடி என்று அறியவும். உடனடியாக போலீசில் புகார் செய்யவும். சைபர் குற்றத்திற்கு சைபர் கிரைம் டோல் ப்ரீ ஹெல்ப் லைன் எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யவும்.
The post சைபர் அரெஸ்ட் சட்டத்தில் கைது செய்ததாக கூறி ரூ.1.15 கோடி நூதன மோசடி : 3 பேர் கைது appeared first on Dinakaran.