- மணாலி டிபிபி
- திருவொற்றியூர்
- மணாலி சிபிசிஎல்
- திருவொட்டியூர்-
- பொன்னேரி பஞ்செட்டி சாலை
- மணாலி டிபிபி
- தின மலர்
திருவொற்றியூர்: மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாதபடி பழுதடைந்து காணப்படும் மணலி டி.பி.பி. சாலையில் தொடர் விபத்துகள் நடப்பதால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணலி சி.பி.சி.எல். நிறுவனம் அருகே உள்ள திருவொற்றியூர்-பொன்னேரி பஞ்செட்டி சாலையில் தினமும் மாநகரப் பேருந்து, கன்டெய்னர் லாரி, கார், பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஆங்காங்கே பழுத்தடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பழுதாகி அடிக்கடி நின்றுவிடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பைக்கில் செல்பவர்கள் சாலையில் சிதறி கிடக்கும் கருங்கற்களில் சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். தற்போது, விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவதோடு பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்லும் தொழிலாளர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறையாக சாலையை பராமரிக்காததால் சிபிசிஎல் நிறுவனம் அருகே மிக மோசமாக சாலை பழுதாகி மழைநீர் தேங்கி நிற்கிறது.
சாலையை பராமரிப்பதற்காக சுங்கச்சாவடி கட்டணம், சாலை வரி, வாகன விற்பனை வரி என பல்வேறு வரிகளை கட்டுகிறோம். ஆனால் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. இதனால் விபத்தும், உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது. இந்த பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேறி சாலையில் அதிகளவில் தேங்கவும் வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சாலையை அமைக்க வேண்டும்’’ என்றனர்.
* கனரக வாகனங்கள் இடையூறு
மணலி சிபிசிஎல் நிறுவன வாசலில் ஏராளமான லாரிகள், மோட்டார் பைக் போன்றவை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதால் பிற வாகனங்கள் போக முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.