×
Saravana Stores

ரூ4,620 கோடி முதலீடு பெற்று மோசடி; ஹிஜாவு நிறுவன அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ஹிஜாவு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 15% வட்டி தருவதாகக் கூறி ரூ4,620 கோடி மோசடி செய்துள்ளது குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியும் நான்காவது குற்றவாளியுமான சவுந்தரராஜன் என்பவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுந்தரராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், புகாரை நிரூபிக்கும் வகையில் காவல்துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ4,620 கோடி முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளனர். 16,500 பேர் இதுவரை புகார்கள் அளித்துள்ளனர். 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பிச் செல்லவும், சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்டார். இதை ஏற்று சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

The post ரூ4,620 கோடி முதலீடு பெற்று மோசடி; ஹிஜாவு நிறுவன அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijau ,iCourt ,Chennai ,Economic Crime Unit ,Chennai Hijau Finance Company ,Alexander ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...