வேலூர், செப்.27: வியாபாரியின் வங்கி கணக்கு முடக்கிய பேடிஎம் நிறுவனம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், வியாபாரி. இவர் கடந்த 2020ம் ஆண்டு தொழில் தொடர்பாக உடனடியாக ஆன்லைன் மூலம் தனது செல்போனில் பேடிஎம் நிறுவன பணப்பரிவர்த்தனை செயலியை பதிவிறக்கம் செய்து வங்கிக்கணக்கு தொடங்கி அதன் மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அவருடைய ஆன்லைன் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. அதனால் பாலகிருஷ்ணன் அந்த வங்கிக்கணக்கில் செலுத்தியிருந்த ₹1 லட்சத்தை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து பேடிஎம் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தை தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டு பேசியும் நிறுவனம் சார்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை.
கடைசியில் வங்கிக்கணக்கில் முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், அதனால் அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பாலகிருஷ்ணன் வங்கிக்கணக்கு மூலம் எவ்வித முறைகேடும் செய்யவில்லை என்று தெரிவித்தார். அதன்பின்னரும் அந்த வங்கிக்கணக்கில் இருந்து ₹1 லட்சத்தை எடுக்க முடியாத நிலை காணப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணன் முடக்கப்பட்ட வங்கிக்கணக்கை மீட்டு அதில் இருக்கும் பணத்தை எடுக்கவும், அந்த நிறுவனம் இழப்பீடு வழங்கக்கோரியும் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம் தீர்ப்பு கூறினார். அதில், பேடிஎம் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக மனுதாரர் பாலகிருஷ்ணனுக்கு ₹1 லட்சம் இழப்பீடு மற்றும் ₹10 ஆயிரம் அபாரதம், முடக்கப்பட்ட ஆன்லைன் வங்கிக்கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் அந்த பணப்பரிவர்த்தனை நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
The post பேடிஎம் நிறுவனம் ₹1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் வேலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு வியாபாரியின் வங்கி கணக்கு முடக்கிய appeared first on Dinakaran.