×
Saravana Stores

திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த குடிநீர்: ரசாயன துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி

திருப்போரூர்: ஆலத்தூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுகளால், குடிநீர் மாசடைந்து ரசாயன துர்நாற்றம் வீசுவதால், குடிநீருக்காக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. குளுக்கோஸ், ஷாம்பு, உயிர் காக்கும் மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்பட்டன. இவற்றில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்குள்ள, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு கலந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே பொதுக்கால்வாயில் விட வேண்டும். இதற்கென சிட்கோ சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மையம் முறையாக செயல்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து திறந்தவெளி கால்வாய் மூலம் ரசாயனம் கலந்த கழிவுநீர் தொழிற்பேட்டை வளாகத்திலேயே விடப்படுகிறது. இவை, நேராக சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் ஆங்காங்கே சாலையோரம் தேங்கி பொதுமக்களுக்கு தொற்று நோயை பரப்பி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால், பல்வேறு தொழிற்சாலைகள் தங்களின் கழிவுநீரை தான்தோன்றித் தனமாக வெளியேற்றி வருகின்றன. இவ்வாறு, வெளியேற்றப்படும் கழிவுநீர் விவசாய நிலங்களின் வழியே பக்கிங்காம் கால்வாயில் சென்று கலக்கிறது. இதனால் ஆலத்தூர், வெங்களேரி கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. மேலும், இவ்வாறு செல்லும் கழிவுநீரை குடிக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் ரசாயன நீரால் முகத்துவாரத்தில் பிடிக்கப்படும் இறால் உள்ளிட்ட சிறுவகை மீன்களும் உண்ணத் தகுதியற்றதாக மாறிவிட்டன.

சில நேரங்களில் தொழிற்சாலைகளில் உள்ள பாய்லர்கள் வெடித்து விஷவாயு வெளியேறி இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது சகஜமாகி விட்டது. இதைக்கண்டித்து ஆலத்தூர், வெங்களேரி கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கின்றனர். குறிப்பாக, ஆலத்தூர் ஊராட்சியிலடங்கிய வெங்களேரி கிராமத்தில் உள்ள வீட்டு கிணற்றில் கூட ரசாயனக் கழிவுநீர் கலந்து விட்டது. தொழிற்சாலைகளின் மதிற்சுவரை ஒட்டியே இந்த கிராமம் அமைந்து உள்ளதால் தினமும் சாப்பிடும்போதும், தூங்கும்போதும் கூட நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழக அரசு இந்த ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரை ஆய்வு செய்து, எந்த மாதிரியான நோய்களை இவை பரப்புகின்றன என கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென கோருகின்றனர். மேலும், இதுபோன்று விஷம் கலந்த கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலத்தூர் மற்றும் வெங்கலேரி கிராமங்கள் மட்டும் அல்லாது திருப்போரூர், தண்டலம், பட்டிபுலம், கிருஷ்ணன்காரணை போன்ற கிராமங்களும் இந்த நச்சுக்காற்றால் பாதிக்கப்படுகின்றன.

தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக்காற்று, விஷம் கலந்த கழிவுநீர் போன்ற பிரச்னைகள் ஒருபுறமிருக்க இந்த தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பளிக்கப்படவில்லை. கேட்டால் பிஎஸ்சி., எம்எஸ்சி., கெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற உயர் படிப்புகளை படித்துவிட்டு வா எனக்கூறி திருப்பி அனுப்புகின்றனர். தற்போது, வடமாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வேலை செய்கின்றனர். தொழிற்சாலைகள் தங்களின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை சம்பந்தப்பட்ட கிராம வளர்ச்சிக்கும், கிராமமக்களின் வளர்ச்சிக்கும் செலவழிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், ஓரிரு தொழிற்சாலைகள் தவிர வேறு எந்த தொழிற்சாலையும் தங்களின் கிராம வளர்ச்சிக்காக சல்லிக்காசு கூட செலவழிக்க வில்லை என்று ஆலத்தூர் ஊராட்சி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த, தொழிற்பேட்டையில் ஒரு விபத்து நடந்தால் உடனடியாக தேவைப்படும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற வசதிகள் எதுவும் இல்லை. எனவே, ஆலத்தூர் கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகமும், தொழிற்சாலை கூட்டமைப்பும் இங்கு அவசர மருத்துவ சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவற்றை அமைக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையத்தை சீரமைத்து முறையாக இயக்கி சுத்திகரிப்பு பணியை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையின் நச்சுக்காற்று பாதிப்பு குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது தண்டலம் ஊராட்சியில் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தண்டலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

* தீயணைப்பு நிலையம்
ஆலத்தூர் கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால், இப்பகுதி மக்களுக்கு ஆபத்து நேரங்களில் தப்பிச்செல்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை அரசால் அதுபோன்ற பயிற்சி வழங்கப்பட வேண்டும். பலமுறை தொழிற்சாலைகளில் தீவிபத்து ஏற்பட்டு, அதிகளவில் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் ஆலத்தூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

* ஆணையம் கண்டு கொள்வதில்லை
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்கக்கூடாது என்ற எழுதப்படாத விதி உள்ளது. ஏதேனும், ஒரு தொழிற்சாலையில் தொழிற்சங்கம் தொடங்கினால் பல புகார்களை கூறி தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர். இதனால், இங்குள்ள தொழிற்சாலைகள் பலவும் நிரந்தர தொழிலாளர்களை நீக்கிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் அக்கறை காட்டி வருகின்றன. தொழிலாளர் நல ஆணையம் இதை கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

* இடிந்து விழும் நிலையில் குடியிருப்பு கட்டிடம்
சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் தங்கிக்கொள்ளும் வகையில், இந்த வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால், இவை முறையான பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

The post திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த குடிநீர்: ரசாயன துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Alathur panchayat ,Tirupporur ,Tiruporur ,CITCO ,Mamallapuram road ,Aladhur village ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு