×
Saravana Stores

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி மீண்டும் பொதுமக்கள் சாலைமறியல்: அதிகாரிகள் சமரசம்

ஊத்துக்கோட்டை: எட்டிகுளம் பகுதியில் பாதியில் நிற்கும் சிமென்ட் சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி திருவள்ளூர் சாலை 8வது வார்டில் எட்டிகுளம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் போடப்பட்ட சிமென்ட் சாலை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. எனவே இதை சீரமைத்து புதிதாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் எட்டிக்குளம் பகுதியில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2 வாரத்திற்கு முன்பு சாலை போடப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் சாலையை அகலப்படுத்த வேண்டும் எனக்கூறி சாலைப்பணியை நிறுத்தினர். இதுகுறித்து, நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜிடம் அப்பகுதி மக்கள் புகாரளித்தனர். ஆனாலும் சாலை பணிகளில் முன்னேற்றம் இல்லாததால், நேற்று பிற்பகல் திருவள்ளூர் சாலை 8வது வார்டு திமுக கவுன்சிலர் திரிபுர சுந்தரி ஜெய்கணேஷ் தலைமையில் எட்டிக்குளம் பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊத்துக்கோட்டை செயல் அலுவலர் சதீஷ் மற்றும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்ன வரதன் ஆகியோர் சம்பவயிடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் தனிநபர் சிலர் ஆக்ரமிப்பு செய்துள்ள இடத்தை அளவீடு செய்து எங்களுக்கு சிமென்ட் சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதை கேட்ட அதிகாரிகள் நிள அளவீடு செய்பவர் விடுப்பில் சென்றுள்ளதால் 2 நாள் அவகாசம் கொடுங்கள், அதன்பிறகு அளவீடு செய்து சாலை அமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதை கேட்ட மக்கள் 2 நாட்களில் சாலை போடாவிட்டால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபடுவோம் எனக்கூறி கலைந்து சென்றனர். இதனால் எட்டிகுளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி மீண்டும் பொதுமக்கள் சாலைமறியல்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Citizens ,Uthukkottai ,Ettikulam ,Etikulam ,Oothukottai Municipality, Tiruvallur Road ,Dinakaran ,
× RELATED சிவகாசி தாலுகா அலுவலகம் முன் கால்களை பதம் பார்க்கும் ஜல்லிகற்கள்