செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நவராத்திரியை ஒட்டி 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. செங்கல்பட்டு சின்னக்கடை வீதியில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், 127ம் ஆண்டு தசரா விழா வரும் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி தசரா நடைபெறும் சின்னக்கடை வீதியில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் ராட்சத ராட்டினம் உணவு கூடங்கள் பொழுதுபோக்கு கூடங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
மேலும், வரும் 3ம் தேதி அன்று ஜிஎஸ்டி சாலையில் உள்ள சின்னம்மன் கோயில் குளக்கரையில் இருந்து கங்கை திரட்டி ஊர்வலமாக புறப்பட்டு சின்னக்கடை வீதியில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தசரா விழா தொடங்கும். இதனை ஒட்டி நகரம் முழுவதும் உள்ள வீடுகளில் கொலு நிறுத்தப்படும் முக்கிய அம்மன் கோயில்களான முத்துமாரியம்மன் ஓசூர் அம்மன் சின்ன அம்மன் அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் கொலுநிறுத்தப்படுவது வழக்கம் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஒவ்வொரு மாலை நேரங்களிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் கருமாரியம்மன், சாம்பவி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி, ஆதிபராசக்தி, லட்சுமி, வராகி, மகாலட்சுமி , சின்னம்மன் ஓசூர் அம்மன் என ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பொதுமக்கள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம். இதனை நகர மக்கள் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம், அச்சரப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியினர் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
நவராத்திரி முடியும் 12ம் தேதி இரவு சின்னக்கடை வீதியில் நகரம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள சாமி சிலைகள் அனைத்திற்கும் துர்கா தேவி அல்லது பத்ரகாளி வேடமிட்டு திருத்தேர் வீதி உலா நகரம் முழுவதும் சுற்றி வரும். பின்பு இரவு 12 மணி அளவில் சின்ன கடை வீதியில் ஒன்றின் பின் ஒன்றாக 15திருதேர் அலங்காரம் அணிவகுத்து அலங்கரித்து நிற்கும். அப்பொழுது மகிஷாசுரன் சூரசம்ஹாரம் நடைபெறும் வன்னி மரத்தில் அம்பு எழுதும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதனை காண செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வன்னி மரத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சியை காண வருகை தந்து வழிபடுவது வழக்கம் 10 நாள் தசரா விழாவுக்கு நேற்று முதலே சின்னக்கடை வீதி கலை கட்டியுள்ளது. இதற்காக போலீஸ் பாதுகாப்பு தீயணைப்புத் துறையினர் பொதுப்பணித்துறை நகராட்சி நிர்வாக துறை அனைத்தும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூர், குலசேகரப்பட்டினம் அடுத்தபடியாக செங்கல்பட்டு தசரா மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
The post நவராத்திரியை முன்னிட்டு வரும் 3ம் தேதி தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 12ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது appeared first on Dinakaran.