சண்டிகர்: காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான நேரம் உட்கட்சி பூசலிலேயே கழிவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நமோ செயலி மூலமாக அரியானாவில் உள்ள பாஜ தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து விவாதித்தார். தேர்தலில் பாஜ வெற்றி பெறுவதற்காக வியூகம் குறித்தும் தொண்டர்களுடன் அவர் ஆலோசித்தார்.
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்கட்சியாக தோல்வியடைந்துவிட்டது. கட்சியின் அதிகபட்ச நேரமானது உட்கட்சி கோஷ்டி பூசல் மற்றும் ஒருவரை ஒருவர் சாடுவதிலேயே கழிகிறது. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் குறித்து அரியானாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். தேர்தலில் எங்களுக்கு எதிராக போராடுபவர்களின் முழு அடிப்படையும் பொய். அவர்கள் மீண்டும் மீண்டும் பொய் கூறுகிறார்கள். அவர்களின் பேச்சுக்களுக்கு தலையும் இல்லை, வாலும் இல்லை.
அவர்கள் சூழலை கெடுக்கிறார்கள். முன்பெல்லாம் மிகப்பெரிய கூற்றுக்களை கூறிக்கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சியின் ஒலிப்பெருக்கிகள் வலுவிழந்துள்ளன. சிலர் காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் வலுவிழந்து வருவதாக கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. பத்து ஆண்டுகளாக மக்கள் பிரச்னையில் இருந்து வெகுதொலைவில் இருந்த காங்கிரசால் அரியானா மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெறமுடியாது.
அரியானா மக்கள் பாஜ சேவை செய்வதற்கான இன்னொரு வாய்ப்பை கொடுக்க முடிவு செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் ஊழலற்ற ஆட்சி நடத்தப்பட்டதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது அரியானாவில் முதல் முறையாக நடந்துள்ளது. மாநில இளைஞர்களுக்கு பணமில்லாமல் வேலை கிடைத்துள்ளது. எனவே அரியானா மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்களின் ஆசிர்வாதம் எங்களுடன் உள்ளது. பாஜவுக்கு வெற்றி நிச்சயம்” என்றார்.
The post எதிர்கட்சியாக தோல்வி கோஷ்டி பூசலிலேயே காலத்தை கழிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.