மும்பை: கொட்டி வரும் கனமழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் பேய் மழை பெய்து வருகிறது. கடந்த 23ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மும்பையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலையில் மும்பை உள்பட தானே, பால்கர், நவிமும்பை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் மும்பையில் முல்லுண்டு, பாண்டுப், நாகூர், காஞ்சூர்மார்க் ஆகிய இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று மாலையிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 14 விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமமடைந்தனர். மும்பை அந்தேரி பகுதியில் நேற்று பெய்த கனமழைக்கு 45 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தேரி கிழக்கு பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் சாலையில் நடந்து சென்ற அந்த பெண் பாதாள சாக்கடைக்குள் அடித்து செல்லப்பட்டார்.
தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. விசாரணையில் அந்த பெண் விமல் அனில் கெய்க்வாட் என்பது தெரியவந்தது. இதுவரையில் மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மும்பையில் இன்றும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவசியம் இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் மும்பை மநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக கத்கோபார் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மும்பையில் நேற்று மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரைக்குள் மட்டும் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. வீனா நகரில் 104 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. புனேயிலும் கனமழை பெய்தது. இருந்தாலும் அங்கு பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கும். கனமழை காரணமாக மும்ப்ரா புறவழிச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் குப்பைகள் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புனேவில் 24 மணி நேர மழைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்கர் மற்றும் ரத்னகிரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை appeared first on Dinakaran.