தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வட மாநிலத்திலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்கும் விதமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 5ல் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. இதையடுத்து ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை நடத்தியபோது, சந்தேகப்படும்படி கையில் பையுடன் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன் னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனால், அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டும்படி கூறினர்.
அதன்படி திறந்து காட்டியபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொந்தர்ம்பா ஸ்வைன் (60), போத்தோலபோ சாஹு(30) என்பதும் இவர்கள் மீது ஒடிசா மாநிலத்தில் 2 கஞ்சா கடத்திய வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து சிக்கிய இருவரையும் பூக்கடை போதை தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு; கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: 7 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.