டெல்லி: காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது; எதிர்க்கட்சியாக தோல்வியடைந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்.1ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இன்று ஹரியானா பா.ஜ.க. தொண்டர்களிடம் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தோல்வி அடைந்து வருகிறது. கோஷ்டி பூசல், சண்டை போன்றவற்றிலேயே காங்கிரஸ் அதிக நேரத்தை செலவிடுகிறது. ஹரியானாவில் உள்ள மக்களுக்கு அவர்களின் உட்கட்சி மோதல்கள் தெரியும். 10 ஆண்டுகளாக பொதுப் பிரச்னைகளில் இருந்து ஒதுங்கி குடும்பத்துக்காக வாழும் கட்சி காங்கிரஸ். வாக்குச் சாவடியில் வெற்றி பெற்றவர் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறார். பா.ஜ.க.வுக்கு சேவை செய்ய மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஹரியானா மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.
ஹரியானாவின் பழைய தலைமுறை தொண்டர்களாக இருந்தாலும் சரி, புதிய தலைமுறையினராக இருந்தாலும் சரி, அவர்களின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்துள்ளது. மிகத் தீவிரமான விஷயத்தைக் கூட மிகவும் புத்திசாலித்தனமாக, நகைச்சுவைத் தொனியுடனும் செய்யும் திறன் அவர்களுக்கு உள்ளது. இதை ஹரியானாவிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
The post காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது; கடந்த 10 ஆண்டுகளாக தோல்வியடைந்து வருகிறது: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.