சென்னை : முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சசோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் 471 நாட்கள் சிறை வாழ்க்கைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.
இதனை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன.கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!..சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.