×
Saravana Stores

வாழ்வின் உச்சியை எட்ட உச்சிப்பிள்ளையார்

தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி மாவட்டம், மலைக் கோட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களில் பக்தர்கள் இங்குகூடி வழிபடுவர். மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால், “உச்சிப் பிள்ளையார் கோயில்’’ என்று இதற்கு பெயர் வந்தது.மேலும், இக்கோயில் உருவான சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றும் உள்ளது. ராமச்சந்திர பிரபுவிற்கும், இலங்கையை ஆண்ட ராவணனுக்கும் கடும்போர் மூண்டது. அந்த போரில், ராமபிரான் வெற்றி பெற்று, அயோத்தி திரும்பினார்.

அந்த சமயத்தில்தான், ராமருக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில், ராவணனின் தம்பியும், ராமருக்கு பிடித்த விபீஷணனும் கலந்து கொண்டார். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்து முடிந்தது. மனம் குளிர்ந்த ராமர், போரில் தனக்கு உதவியதற்காக விபீஷணனுக்கு, ரங்கநாத ஸ்வாமி சிலை ஒன்றை பரிசளித்தார்.ராமருக்கு உதவிகளைச் செய்திருந்தாலும், விபீஷணன் ஒரு அசுரர். ஆகையால், ராமர் கொடுத்த ரங்கநாதசுவாமி சிலையினை, விபீஷணன் எடுத்துச்செல்ல தேவர்களுக்கு உடன்பாடில்லை. நேராக, விநாயகப் பெருமாளிடம் சென்று, ராமர் கொடுத்த ரங்கநாதஸ்வாமி சிலையை, விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்று மன்றாடி கேட்டனர். அவர்களின் வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.ராமபிரான் கொடுத்த ரங்கநாதரை, பய பக்தியோடு கையில் ஏந்தியபடி இலங்கையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது விபீஷணன், திருச்சியில் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் காவேரி நதிக்கரையை பார்த்ததும், தன் நித்ய கர்மா (சந்தியாவந்தனம் போன்றவை) நினைவுக்கு வந்தது.

கையில் ஏந்தியிருக்கும் ரங்கநாதரை கீழே வைத்துவிடக்கூடாது. அப்படி வைத்தால், அவர் அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிடுவார். அதுதான் விதி. அதனால், காவேரிக் கரையில் தனது கடமைகளை செய்து முடிக்கும் வரை. இந்த ரங்கநாத ஸ்வாமி சிலையை கீழே வைக்காமலும், பாதுகாக்கவும் ஒருவர் வேண்டுமே என்ற எண்ணவோட்டத்துடன், யாராவது நம் கண்களுக்கு தெரிகின்றார்களா?.. என்றபடி சுற்றிலும் நோட்டமிட்டார், விபீஷணன்.அப்போது அங்கு தூரத்தில், சிறுவன் ஒருவன் நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்டதும், விபீஷணனுக்கு ஒரே மகிழ்ச்சி. அவனை அழைத்த விபீஷணன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் காவேரி நதிக் கரைக்கு சென்று கடமைகளை முடிக்கும் வரை, இந்த ரங்கநாதஸ்வாமி சிலையை பாதுகாக்கும் படி, அந்த சிறுவனிடத்தில் கேட்டுக் கொண்டார். மேலும், நான் வரும் வரையில், இதனை கீழே வைத்து விடவும் கூடாது என்றும் கட்டளையிட்டார்.“அதெல்லாம் சரி… நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் கடமைகளை செய்ய கரைக்கு சென்றவுடன், சற்று நேரம் கழித்து, உங்களை மூன்று முறை அழைப்பேன். அதற்குள் நீங்கள் வந்துவிடவேண்டும். இல்லையெனில், ரங்கநாதஸ்வாமியை இங்கேயே கீழே வைத்துவிடுவேன்’’ என்று அந்த சிறுவன் கூறினான்.

“அதற்குள் வந்துவிடுவேன்’’ என்று உறுதியளித்துவிட்டு, கடமைகளைச் செய்ய காவேரி கரைக்குச் சென்றார், விபீஷணன். சற்று நேரம் சென்றது, “விபீஷணா…’’ என்று சிறுவன் முதல் முறையாக அழைத்தான். அதைக் காதில் வாங்காமல் தன் கடமைகளை செய்து கொண்டிருந்தார், விபீஷணன். சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும், “விபீஷணா…’’ என்று அழைத்தான் சிறுவன். இம்முறை சற்று பதறிய விபீஷணன், “இதோ…வந்து விடுகிறேன்’’ என்றார். நேரம் கடந்ததால், “விபீஷணா…’’ என்று கடைசி முறையும் அழைத்தான் சிறுவன். “கீழே வைத்துவிடாதே… இதோ முடிந்துவிட்டது. வந்துவிடுகிறேன்’’ என்று கத்திக் கூப்பாடு இட்ட படியே ஓடிவந்தான் விபீஷணன். ஆனால், மூன்று முறை அழைத்தும் வராததால், ரங்கநாதஸ்வாமி சிலையை கீழே வைத்தவுடன், விபீஷணன் அங்கே வந்துநிற்கவும், ஒரு நொடி பொழுதுதான் ஆகின.கீழே வைத்த ரங்கநாதஸ்வாமி சிலை பெரியதாகி, அவ்விடத்திலேயே பிரதிஷ்டை ஆனார். (அந்த ரங்கநாதஸ்வாமிதான் இன்றும் ரங்கத்தில் அருளிவருகிறார்) இதைக் கண்ட விபீஷணனுக்கு கடும் கோபம் வந்தது. அந்த சிறுவனை பாய்ந்து அடிக்க முயன்றார். அதற்குள், சிறுவன் ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கினான்.

சிறுவனை துரத்திக் கொண்டே பின்னால் ஓடினார், விபீஷணன். ஒரு கட்டத்தில், மலையின்மீது நின்றான் அந்த சிறுவன். சிறுவனை பிடித்த விபீஷணன், சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தார். உடனே, தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி, “தான் சிறுவன் இல்லை, சிறுவன் உருவில் வந்த விநாயகப் பெருமான்’’ என்று விபீஷணனுக்குக் காட்சி கொடுத்து, “ரங்கநாதஸ்வாமி என் அருகிலேயே இருக்கத்தான் தாம் இத்தகைய நாடகமாடினோம்’’ என்று விபீஷணனுக்கு அருளாசி வழங்கினார், விநாயகப் பெருமான்.அதுமட்டுமல்லாது, அங்கேயே தானும் கோயில் கொண்டார். இன்றும் உச்சிப்பிள்ளையாரின் உச்சந்தலையில் விபீஷணன் இட்ட கொட்டின் குழியை காணலாம். அத்தகைய பெருமைவாய்ந்த உச்சிப் பிள்ளையாரை, தரிசித்து போற்றி, வணங்கி, வேண்டுவோம்.
– ரா.ரெங்கராஜன்.

 உச்சிப் பிள்ளையார், சுமார் 273 அடி உயரத்தில் (மலைக்கோட்டை) கோயில் கொண்டுள்ளார்.
 உச்சிப் பிள்ளையார் சந்நதியை அடைய, 437 படிகளை ஏறி கடக்க வேண்டும்.
 வருடாவருடம், விநாயகசதுர்த்தி அன்று, உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ கொழுக் கட்டை நிவேதிக்கப்படுகிறது.
 உச்சிப் பிள்ளையாரைத் தரிசிக்க பாதிதூரம் கடந்ததும், தாயுமானஸ்வாமி சந்நதி இருக்கிறது. சுகப் பிரசவம் ஆக, கர்ப்பிணி பெண்கள் இவரை வேண்டுவது சிறப்பு.
 மலைக்கோட்டையின் இருபுறப்பகுதிகளில், பிரபலமான தேவாலயம் மற்றும் மசூதி உள்ளது. இது சமத்துவத்தின் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. (உச்சிப் பிள்ளையார் சந்நதியில் இருந்து இவைகளைக் காணலாம்).
 மேலும், மலைக் கோட்டையின் கீழே அதாவது, உச்சிப்பிள்ளையாரைத் தரிசிக்க ஏறும் வழியில், மாணிக்க விநாயகப் பெருமாள் சந்நதி உள்ளது. வயதானவர்கள் மற்றும் படிகளை ஏறி உச்சிப்பிள்ளையாரைத் தரிசிக்க முடியாதவர்கள், மாணிக்க விநாயகரைத் தரிசிக்கலாம்.

The post வாழ்வின் உச்சியை எட்ட உச்சிப்பிள்ளையார் appeared first on Dinakaran.

Tags : Uchip Pillaiyar Temple ,Tamil Nadu ,Trichy district ,Ingudi ,Sankatahara Chaturthi ,Vinayaka ,
× RELATED காவல்துறையில் பணிக்கு...