- Tadco
- திருவாரூர் மாவட்டம்
- திருவாரூர்
- கலெக்டர்
- சாரு
- திருவாரூர் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திருவாரூர், செப்.26: திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 250 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 94 லட்சம் மதிப்பில் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக இருந்து வருகிறது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் அதிக எண்ணிக்கையில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய திட்டங்கள் குறித்து அவ்வப்போது நாளிதழ்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஆதிதிராவிடர் இனத்தவர்களுக்கு வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத்திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டமாக மருத்துவமனை அமைத்தல், மருந்தகம், கண் கண்ணாடியகம், முடநீக்குமையம், ரத்தபரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு 30 சதவீதம் அல்லது திட்டமதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கீட்டு அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்திற்கு 50 சதவீதம் அல்லது திட்ட மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட்டு அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின மக்களுக்காக தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், நிலம் மேம்பாட்டுத்திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இத்திட்டங்களுக்கு 50 சதவீதம் அல்லது திட்டமதிப்பிட்டிற்கு ஏற்றவாறு கணக்கீட்டு அதிகப்பட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-24 நிதியாண்டாக கடந்த ஓராண்டில் மட்டும் முதலமைச்சர் எழுச்சி திட்டத்தின் கீழ் 35 சதவிகித வட்டி மானியமாக 58 பேர்களுக்கு ரூ ஒரு கோடியே 3 லட்சத்து 54 ஆயிரமும், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 83 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 15 ஆயிரம் வட்டி மானியமும் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரமும், ஆவின் பாலகம் அமைப்பதற்காக ஒருவருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும், சிமெண்ட் குடோன் அமைக்க ஒருவருக்கு ரூ 90 ஆயிரமும் மற்றும் மகளிர் குழு பொருளாதார மேம்பாட்டிற்காக 84 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரமும் என மொத்தம் 250 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 93 லட்சத்து 93 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் பயன்பெற வயது 18 முதல் 45 வரை இருக்கவேண்டும் என்பதுடன் ஏனைய திட்டங்களுக்கு வயதுவரம்பு 18 முதல் 65 வரை இருக்கலாம். மேற்கண்ட திட்டங்களில் ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது இருப்பிடசான்று,
சாதிசான்று, வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விலைப்புள்ளி, திட்டஅறிக்கை, வாகன கடன் பெறுவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித்தகுதி சான்றிதழ், நிலம் சார்ந்ததிட்டங்களுக்கு நிலம் தொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவுசெய்யலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு தாட்கோ மாவட்டமேலாளர் அலுவலகம் மூலம் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 250 பயனாளிகளுக்கு ₹3 கோடி மானியம் appeared first on Dinakaran.