கும்பகோணம், செப்.26: கும்பகோணம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதை பொருட்களை வியாபாரிகள் சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கும்பகோணம் மாநகர உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சசிகுமார், முத்தையன் மற்றும் கலால் தாசில்தார் அருள்மணி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் கும்பகோணம் மாநகர பகுதியின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கும்பகோணம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் சுமார் 10.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெட்டிக்கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் கடையை 15 நாட்கள் மூடி வைக்க உத்தரவிடடனர். இதேபோல் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஒரு கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 250 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்களை நாச்சியார் கோவில் போலீசில் ஒப்படைத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர்.
The post கும்பகோணத்தில் 250 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.