காரைக்கால், செப்.26: காரைக்காலில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நடந்த நடந்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் பேசிய மாவட்ட கலெக்டர் மணிகண்டன் லஞ்சத்தை ஊக்குவிக்க ஒருபோதும் துணை போகக்கூடாது அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். புதுவை அரசு மூலம் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பாக லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று நடைபெற்றது. காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் தலைமை வகித்தார். துணை மாவட்ட ஆட்சியர்கள் ஜான்சன் (வருவாய்), வெங்கடகிருஷ்ணன் (பேரிடர் மேலாண்மை), பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, நலவழித்துறை, மின்துறை, கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம், சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முகாமினை துவக்கி வைத்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் பேசியதாவது: அரசு ஊழியர்கள் பணியின்போது கூடுதல் கவனத்துடன் பணி செய்ய வேண்டும். அரசு நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகளும் அந்தந்த துறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தவறு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருந்தால் மக்கள் நம்மை பாராட்டுவார்கள். அந்தந்த துறை தலைவர்கள் கவனிப்புடன் பணியாற்ற வேண்டும். லஞ்சத்தை ஊக்குவிக்க ஒருபோதும் துணை போகக்கூடாது. உங்கள் துறை ஊழியர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பாக முடியும். பணி செய்யாமல் இருந்தால் அதுவும் தவறு. கோப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பது அரசு அதிகாரிகளின் கடமையாகும், அதில் காலதாமதம் ஏற்பட்டால் அது தவறு செய்ய நேரிடும்.
பொதுமக்கள் குறை கூறாமல் பணிகள் நடைபெற வேண்டும். காரைக்கால் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேர்மையாக செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் பணியை பொதுமக்கள் பாராட்டும் வண்ணம் பணி செய்ய வேண்டும்.பொதுமக்கள் அதிகம் கூடும் துறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் நேர்மை தவறாமல் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு போதிய ஊதியம் வழங்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் மணிகண்டன் பேசினார்.இறுதியில் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் அரசு அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
The post அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சத்தை ஊக்குவிக்கஒருபோதும் துணை போகக்கூடாது appeared first on Dinakaran.