×
Saravana Stores

முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய விவகாரம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேச கூடாது: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக எப்போதும் பேசக்கூடாது என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோரிபாளையா இந்தியாவிற்குள் இல்லை அது பாகிஸ்தான் என கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் பதிவுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது. அதனை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சர்ச்சையான கருத்துகளை கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஏன் தெரிவித்தார் என்பது குறித்து கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவாளர், நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தாவிடம் கேட்டு அதுதொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கடந்த 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சூர்யகாந்த், பி.ஆர்.கவாய் மற்றும் ஹச்.ராய் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதி வெளிப்படையாகவே தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தை இனிமேலும் இழுக்க வேண்டாம்” என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், “இந்த சர்ச்சை கருத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதி திறந்த நீதிமன்றத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில்போது மன்னிப்பு கேட்டிருப்பது உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், நீதி பரிபாலனையின் கண்ணியத்தின் நலன் கருதி சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நோட்டீஸ் அனுப்புவதைத் உச்ச நீதிமன்றம் தவிர்த்து விட்டது.

பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்திய கர்நாடக நீதிபதியின் மன்னிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாட்டில் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்கள் தற்போது வழக்கு விசாரணையை நேரலை செய்து வருகின்றன. எனவே இந்த நேரலை என்பது மக்கள் மத்தியில் நேரடியாக செல்பவை என்பதை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறையினர் மனதில் கொள்ள வேண்டும். ஒரு கருத்தை தெரிவிக்கும் முன்னதாக அதனால் ஏற்படும் தாக்கத்தையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக நீதிபதியின் இதயமும், மனசாட்சியும் பாரபட்சமற்றதாக இருந்தால் மட்டுமே நீதியை தவறாமல் வழங்க முடியும்.

நீதித்துறையில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே அரசியலமைப்பில் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீதித்துறையின் அனைத்து தரப்பினரும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பாரபட்சமின்றி நடந்து கெள்ள வேண்டும். அவ்வாறு செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்க வேண்டாம். இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது ஆகும். நீதி என்பது சூரிய ஒளி போன்று பிரகாசமானது. அது மேலும் பிரகாசமானதாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் நீதிமன்றத்தில் நடப்பதையும் வெளிச்சத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர மூடி மறைக்கக் கூடாது” என்று தெரிவித்த தலைமை நீதிபதி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய விவகாரம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேச கூடாது: கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Supreme Court ,Karnataka High Court ,New Delhi ,Koripalaya ,Bengaluru, Karnataka ,India ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...