×

காரில் விஷம் குடித்து 5 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோகம்; உருக்கமான கடிதம் சிக்கியது

திருமயம்: புதுக்கோட்டை அருகே காரில் அமர்ந்தபடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலத்தை சேர்ந்த இவர்கள், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம், திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையோரம் உள்ள நகர சிவ மடம் எதிரே நேற்றுமுன்தினம் இரவு முதல் ஒரு கார் நின்றிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் சிவமடத்தின் வாட்ச்மேன் அடைக்கலம் (70), அந்த காருக்கு அருகே சென்று பார்த்து நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து விசாரித்ததில், டிஎன் 77 எம் 1705 என்ற எண் கொண்ட அந்த கார் சேலம் பதிவெண் கொண்டதும், காரின் முன் சீட்டில் ஒரு ஆண், ஒரு பெண், பின் சீட்டில் 2 பெண், ஒரு ஆண் என 5 பேர் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. சோதனையில் உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ‘தொழில் நஷ்டத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணம் கேட்பதால் மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் காரில் அமர்ந்தபடியே விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்கொலை செய்தது சேலம் டவுன் ஏவிஆர் ரவுண்டானா அருகே ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த மணிகண்டன் (55), மனைவி நித்யா (50), மகன் தீரன் (21), மகள் நிகரிகா(20), மணிகண்டனின் தாய் சலோஜா (70) என ெதரியவந்தது. கடந்த 3 மாதங்களாக வாடகை வீட்டில் குடியிருந்து வந்ததாகவும், மணிகண்டன் அவரது வீட்டிலேயே எஸ்எம் மெட்டல் என்ற அலுவலகம் நடத்தி வந்ததும், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை சிப்காட் உள்ளிட்ட பகுதியில் பார்ட்னராக காப்பர் நிறுவனம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, சேலம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டைக்கு எதற்காக வந்தனர், எதற்காக நகர சிவமடம் அருகே காரை நிறுத்தி தற்கொலை செய்து கொண்டனர், தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்கின்றனர்.

* காரணம் என்ன?
மணிகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா அச்சமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், ரூ.4 கோடி அளவுக்கு பொருட்கள் வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை அவர் திருப்பிக் கொடுக்காததால், அந்த நிறுவன உரிமையாளர், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மணிகண்டன், கடந்த 23ம் தேதி (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அவர் ஆஜர் ஆகவில்லை. இதனால் அவர் 26ம் தேதி (இன்று) ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில்தான், அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, இதுவரை அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. அவர் கிருஷ்ணகிரியும் வரவில்லை என்று கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

* சீட்டு கம்பெனியில் ரூ.10 லட்சம் இழப்பு தாய், தந்தையுடன் மகன் தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, நெய்குப்பை ஊராட்சியை சேர்ந்த என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (58). இவரது மனைவி கலா (53). இவர்களுக்கு பிரியா (30), நித்யா (28), சிவா (26) என்ற 3 பிள்ளைகள். இதில் பிரியா, நித்யா இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சிவாவிற்கு கடந்த ஆண்டு அனிதா என்பவருடன் திருமணம் நடந்தது. சிவா வேலைக்கு செல்லாமல் இருந்ததால் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா கோபித்து கொண்டு கடந்த
10 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சிவா, தீபாவளி பலகாரம் செய்து தருவதாக கூறி என்.புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100க்கு மேற்பட்டோரிடம் வசூல் செய்து வைத்திருந்த ரூ.10 லட்சத்தை அதிக வட்டி கிடைக்கும் என நம்பி ஒரு சீட்டு கம்பெனியில் கொடுத்து வைத்திருந்தார். ஆனால் அந்த நிறுவனத்தார் ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவா, பெற்றோர் சின்னதுரை, கலா ஆகியோருடன் அருகில் உள்ள புளியந்தோப்பு பகுதிக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

The post காரில் விஷம் குடித்து 5 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோகம்; உருக்கமான கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Salem ,Pudukkottai District Namanasamudram, Trichy ,
× RELATED நாகுடி பகுதியில் மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது