×
Saravana Stores

பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிட அருள்நெறியாளர் பி.டி.ராஜன் புகழ் போற்றுவோம் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கிற இன்றைய திராவிட மாடல் அரசின் கொள்கைக் கோட்பாட்டினை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே முன்னெடுத்த திராவிட அரசியல் இயக்கமான நீதிக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள்.

நீதிக்கட்சியின் மூன்று பெரும் தலைவர்களான பிட்டி தியாகராயர் டாக்டர் நடேசனார் -டி.எம்.நாயர் ஆகியோரின் சமூகநீதி எனும் மிகப்பெரும் இலட்சியத்தைச் செயல்வடிவமாக்கிய பனகல் அரசர், ஏ.டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தளகர்த்தர்கள் வரிசையில் திரு. பி.டி.ராஜன் அவர்களுக்குத் தனி இடம் உண்டு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இரட்டையாட்சி முறையில் 1920-ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்திற்கு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நீதிக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இளம் வேட்பாளராக இருந்தவர் பி.டி.ராஜன் அவர்கள். அவருடைய சிந்தனைகளும் செயலாற்றலும் மிகுந்த முதிர்ச்சியுடையனவாக இருந்தன.

வகுப்புவாரி இடஒதுக்கீட்டு ஆணை, பெண்களுக்கு வாக்குரிமை, பொது இடங்களில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் சமஉரிமை போன்ற அரசாணைகளை வெளியிட்டு, சமத்துவச் சமுதாயத்திற்கு நீதிக்கட்சி அடித்தளமிட்டது.

பனகல் அரசர் தலைமையிலான அமைச்சரவை உருவாக்கிய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கம் போன்றவற்றில் பி.டி.ராஜன் அவர்களின் பங்களிப்பு சிறப்பான முறையிலே அமைந்திருந்தது. கூட்டுறவுச் சங்கங்கள் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் பெருகத் துணை நின்றன. அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கடவுளின்முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியது.

தமிழுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் பயன் தரும் வகையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிக்கட்சி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கியவர் பி.டி.ராஜன் அவர்கள். அவருடைய ஆலோசனைகள் அடங்கிய அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் உருவானதுதான் புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம்.

அன்றைய மதுரை மாவட்டம் உத்தமபாளையத்தில் பிறந்த பி.டி.ராஜன் அவர்கள் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ்மொழியின் மீது தான் கொண்ட எல்லையில்லா ஈடுபாட்டினால் தமிழ்த் தொண்டையும், பல நூற்றாண்டுகளாகப் புனரமைக்கப்படாத பல முக்கிய திருக்கோயில்களைப் புனரமைத்து ஆன்மீகத்தைச் செழுமைப்படுத்திடும் வகையில் இறைத் தொண்டையும் மேற்கொண்ட பெரியவர் தமிழவேள் பி.டி.ராஜன் அவர்கள் என்றால் அது மிகையல்ல!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலைப் புனரமைத்துக் குடமுழுக்கு நடைபெறச் செய்தார். சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் ஐம்பொன் சிலையை நிறுவினார். அதன் மூலமாக பக்தர்கள் பலரும் சபரிமலை செல்வதை வழக்கமாகக் கொண்டனர். பழமுதிர்சோலை, வடபழனி உள்ளிட்ட பல திருக்கோயில்களைச் செப்பனிட்டுத் திருப்பணி செய்த திராவிட அருள்நெறியாளர் பி.டி.ராஜன் அவர்கள். நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், சென்னை மாகாணத்தின் முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்று, தனது தூய தொண்டினால் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தார்.

ஆளும்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், நீதிக்கட்சியின் சார்பில் தனியொருவராகச் சட்டமன்றம் சென்ற நிலையிலும், தம் கருத்துகளை வலிமையாகப் பதிவு செய்து, தாம் கொண்ட கொள்கைகளில் இருந்து தடம் மாறாமல் பயணித்த கொள்கைச்சுடர் அவர்.

கட்சிப் பாகுபாடுகள் கடந்து அனைவராலும் போற்றப்படும் சிறந்த பண்பாளரான தமிழவேள் பி.டி.ராஜன் அவர்களுடைய 50-ஆவது நினைவு ஆண்டு கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் லால்குடி தாலுகா முதலாவது மாநாடு 1928-ஆம் ஆண்டு ஜூன் 9, 10 ஆகிய நாட்களில் நடைபெற்றபோது அதில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றியவர் பி.டி.ராஜன் அவர்கள். தந்தை பெரியாரின் குடிஅரசு ஏடு அவரது சொற்பெருக்கை வெளியிட்டுள்ளது.

அரசுப் பணிகளில் அனைவருக்கும் வாய்ப்பு, கோயில் கருவறை வரை சென்று அர்ச்சனை செய்யும் உரிமை ஆகியவற்றை அந்த மாநாட்டில் வலியுறுத்திப் பேசிய திராவிட அருள்நெறியாளர் பி.டி.ராஜன் அவர்கள், தந்தை பெரியாரின் கயமரியாதைத் திருமண முறையைப் பாராட்டியதுடன், இத்திருமணங்களைச் சட்டng உரிமையாக்கிட வேண்டும் என்றும் அதற்கேற்பச் சட்டங்களைத் திருத்தியமைத்துக் கொள்ளும்படியும் தன் நண்பரான பெரியாருக்கு எச்சரிக்கை கலந்த வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறார்.

1928-இல் அவர் முன்வைத்த கோரிக்கை ஏறத்தாழ 40 ஆண்டுகள் கடந்து, பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1967-ஆம் ஆண்டு அமைந்தபோது, தந்தை பெரியார் அவர்கள் திருத்தித் தந்த வரைவின் அடிப்படையில் சுயமரியாதை திருமணச் சட்டம் எனப்படும் ‘தமிழ்நாடு அரசு இந்து திருமணத் திருத்தச் சட்டம்’ என நிறைவேற்றப்பட்டது. 1928-இல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்கள் உள்பட அனைத்து சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட ஏற்பு அளிக்கும் வகையில் முன்தேதியிட்டு அதனை நிறைவேற்றிய பேரறிஞர் அதனைப் பெரியாருக்குக் காணிக்கையாக்குவதாக அறிவித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தைத்தான் தொலைநோக்குப் பார்வையுடன் 1928-இல் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பி.டி.ராஜன் அவர்கள் வலியுறுத்தினார்.

1967-ஆம் ஆண்டு பி.டி.ராஜன் அவர்களின் சிரிய முயற்சியாய் நடைபெற்ற நீதிக்கட்சியின் பொன் விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்துகொண்டு பொன்விழா மலர் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். 1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் சென்னையில் நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழறிஞர்களுக்கும், காப்பிய நாயகி கண்ணகிக்கும் என 10 சிலைகள் கடற்கரையில் நிறுவப்பட்டன.

அதில் கப்பலோட்டிய தமிழர் வ.உசிதம்பரனார் சிலையைத் திறந்து வைத்தவர் பி.டி.ராஜன் அவர்கள், முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மதுரையில் நடைபெற்ற பி.டி.ராஜன் அவர்களின் 82-ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, ஆயிரம் பிறை கண்ட அண்ணல்’ எனப் போற்றியதுடன், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தேவிகுளம், பீரமேடு பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தைப் பி.டி.ராஜன் தலைமையேற்று நடத்தித்தந்த பாங்கினை எடுத்துரைத்தார்.

தமிழுணர்வும் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழமான பற்றும் கொண்ட பிபடி ராஜன் அவர்கள் வழியில் அவரது புதல்வர் அரசியல் பண்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தென்மாவட்டத் தி.மு.கழகத்தின் தூணாகவும், தலைவர் கலைஞர் அவர்களுக்குத் துணையாகவும் இருந்து செயல்பட்டவர்.

அத்தகைய கொள்கைப் பண்புமிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாகத் தனது தாத்தா மற்றும் தந்தை ஆகியோரது வழித்தடத்தில் திராவிட இயக்க கொள்கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அறிவாற்றலோடு நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் நிறைவேறத் துணைநின்று பாடுபட்டு வரும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் அவர்களுக்குப் பாராட்டுகள்!

ஒப்பற்ற தனது தாத்தா தமிழவேள் திரு. பி.டி.ராஜன் அவர்களுடைய பொது வாழ்க்கையைத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் அறிந்துகொள்ள எதுவாக, அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது கருத்துரைகளையும், சான்றோர் பலர் அவருக்குச் சூட்டிய புகழ்மாலைகளையும் தொகுத்து “தமிழவேள் பி.டி.ராஜன் நினைவுகளில் 50 எனும் அரிய நூலை படைத்தளித்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் அவர்களுக்குச் சிறப்பு பாராட்டுகள்! வாழ்த்துகள்!

இந்த நூல் திராவிட இயக்க வரலாற்றை அறிய விரும்பும் இளம் தலைமுறையினருக்கு நல்லதோர் அறிவுக் கருவூலமாக விளங்கும். திராவிட இயக்கம் இளைய இரத்தத்தின் வேகத்தையும் மூத்தவர்களின் அனுபவத்தையும் இணைத்துப் பயணிக்கிற இயக்கமாகும். திராவிட இயக்க முன்னோடியான பி.டி.ராஜன் அவர்களின் நினைவை என்றென்றும் போற்றி, அவர்கள் கண்ட இலட்சியக் கனவை நிறைவேற்ற அயராது பாடுபடுவோம்.

 

The post பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : B. D. Rajan ,K. Stalin ,Chennai ,Dravitha Arulneriyayu B. D. RAJAN ,DRAVITA MODEL STATE ,Vail B. D. Rajan ,
× RELATED நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!