×
Saravana Stores

இ-3 சாலை திட்ட பணியை துவக்க கோரி அருப்புக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம்

*வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கிடப்பில் போடப்பட்ட இ-3 சாலை திட்ட பணியை துவக்க கோரி வியாபாரிகள் சங்கத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

குறிப்பாக அண்ணா சிலை பகுதி, நாடார் சிவன் கோயில், திருச்சுழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை செல்லும் தொலைதூர பஸ்கள் அருப்புக்கோட்டை பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து புறவழிச்சாலையிலேயே செல்கின்றன. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ-3 சாலை திட்டம் தொடங்கப்பட்டது. டிஆர்வி நகர், ரயில்வே பீடர் ரோடு, விவிஆர் காலனி, எஸ்பிகே கல்லூரி ரோடு என 70 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. 30 சதவீத பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கிடப்பில் போடப்பட்ட பணியை துவக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட இ-3 சாலை பணியை தொடங்க கோரி நல்லூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏற்கனவே கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. தற்காலிக பேருந்து நிலையத்திலுள்ள கடைகள், புதிய பஸ் ஸ்டாண்ட் ரோட்டிலுள்ள கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
தொடர்ந்து புதிய பஸ் ஸ்டாண்ட் முன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ் துவக்கி வைத்தார். நல்லூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரக்கத்து முகைதீன் தலைமை வகித்தார். சங்க கவுரவ ஆலோசகர் முகமது சிக்கந்தர் முன்னிலை வகித்தார். இதில் வியாபாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்காலிக பேருந்து நிலையம், புதிய பஸ் ஸ்டாண்ட் ரோடு தவிர மற்ற பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் இயங்கின.

இதனிடையே அருப்புக்கோட்டை இ-3 சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் மதார்கான், செயற்குழு உறுப்பினர் அப்துல்கரீம், நகர தலைவர் சேக்அப்துல்லாஹ் ஆகியோர் நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் இ3 சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தி அப்பகுதியை சுற்றி வாழும் மக்களுக்கும் அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிசெய்ய வேண்டும்.

புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வாழவந்தபுரத்திலிருந்து ரயில்வே பீடர் சாலையை இணைக்கும் சாலை முடிவுப்பெறாமல் தெப்பக்குளம் வடக்கு பகுதியின் தொடக்கம் வரை மட்டுமே உள்ளது. அந்தச் சாலை பணியை ரயில்வே பீடர் சாலையுடன் இணைத்தும் அதேபோன்று தெப்பக்குளத்தின் மேற்கு பகுதி எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையுடன் இணைக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகிறார்கள்.இந்தச் சாலையை பள்ளிச் சாலையுடன் இணைத்து தர வேண்டும்.

வாழந்தபுரம் பெரியதெருவில் இருந்து மாரியம்மன் கோவில் வழியாக எஸ்பிகே பள்ளி சாலையுடன் இணைக்கும் ரோடு முடிவுப்பெறாமல் பாதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் பணியை முடிக்க வேண்டும். நல்லூர் முஸ்லிம் நடுத்தெருவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை சேதம் அடைந்துள்ளது புதிய கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை அமைத்து மக்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post இ-3 சாலை திட்ட பணியை துவக்க கோரி அருப்புக்கோட்டையில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,E-3 ,Aruppukottai ,Anna statue ,Dinakaran ,
× RELATED அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்...