பண்டாசுரன் என்ற அசுரன், பரமேஷ்வரனை நோக்கி தவம்புரிந்து வரங்கள் அநேகம் பெற்றான். பிறகென்ன, தேவர்களையும் மனிதர்களும், ரிஷி முனிவர்களையும், தொல்லை செய்ய ஆரம்பித்தான். பண்டாசுரனுக்குப் பயந்த தேவர்கள், இமயமலைக்குச் சென்று மகாயாகம் வளர்த்து, பராசக்தியை பூஜித்தார்கள். அவர்களின் பக்திக்கு மனம் கனிந்த இறைவி, யாக குண்டத்தில் இருந்து, லலிதா திரிபுரசுந்தரியாகத் தோன்றினாள். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அபயம் கொடுத்தாள். தனது படையைத் தானே உருவாக்கிக் கொண்ட, பராசக்தியான லலிதா திரிபுரசுந்தரி, பண்டாசுரனை எதிர்த்து போர்புரிய புறப்பட்டாள். அசுரனுக்கும் இறைவிக்கும் இடையே கோரமான யுத்தம் நடந்தது. பலப்பல அசுரர்களை, தேவியை எதிர்த்து போர் புரிய பண்டாசுரன் அனுப்பினான்.
அவர்களும் பலப்பல மாயைகளை பயன்படுத்தி கடும் யுத்தம் புரிந்தார்கள். அவர்கள் அனைவரையும் லலிதாம்பிகையும், அவளது படையில் இருந்த பலப்பல தேவிகளும் கொன்று ஒழித்தார்கள். இதனால் கோபமடைந்த பண்டன், நூறு அக்ஷௌஹினி சேனையோடு, கரண்டன், காகாசிதன், வஜ்ரதந்தன், வஜ்ரமுகன், வஜ்ரலோமன் என்ற தனது நான்கு படைத்தள பதிகளையும் அம்பிகையை எதிர்த்து போர் புரிய அனுப்பினான். பெரும் கூச்சலும் பேரிரைச்சலும் செய்துகொண்டு இவர்கள் போர்க்களம் புகுந்தபோது, எழுந்த புழுதியால் வானமே மறைந்துபோனது.
போர்க்களத்தில் புகுந்த இவர்கள் கடுமையாகப் போர் புரிந்தார்கள். அம்பிகையின் குதிரைப்படை தலைவியான அஷ்வாரூடா தேவியானவள் இவர்களை எதிர்த்து போர் புரிந்தாள். அஷ்வாரூடா தேவியின் யுத்த சாகசத்தால் இவர்களின் படை பின்வாங்கத் தொடங்கியது. அதைக் கண்ட இந்த ஐந்து படைத்தளபதிகளும், சர்பினி மாயை என்ற மாயையை உருவாக்கி, லலிதாம்பிகையின் படையை எதிர்த்து ஏவினார்கள்.
அந்த சர்பினி மாயையானது, அசுரனின் வேண்டுகோளுக்கு இணங்கி யுத்தக் களத்தில் தோன்றியது. ருஷன், கார்கோடகன், வாசுகி, போன்ற பலகொடிய விஷமுள்ள பாம்புகளை கோடிக்கணக்கில் உருவாக்கி, அம்பிகையின் படையின்மீது தொடுத்தாள் சர்பினி மாயை. திடீரென்று வந்த கோடிக்கணக்கான விஷப்பாம்புகள், அம்பிகையின் படையை கோரமாக
தாக்கியது.
பாம்புகளின் விஷக்காற்றாலும், விஷக்கடியாலும், அம்பிகையின் படை, பெரும் அவஸ்தைக்கு ஆளானது. அம்பிகையின் குதிரைப்படைத் தளபதியான அஷ்வாரூடா தேவியால்கூட, பாம்புகளின் இந்த கோரத் தாக்குதலையும் சர்பினி மாயையையும் எதிர்கொள்ள முடியவில்லை.ஆகவே, அம்பிகையின் படையில் இருந்த தேவதைகள் அனைவரும், “அபயம்… அபயம்…’’ என்று லலிதாம்பிகையின் பாதத்தில் போய் விழுந்தார்கள். அதைக்கண்ட அம்பிகை, கருணையோடு தனது படை வீராங்கனைகளைக் கண்டு புன்னகை பூத்தபடியே தன்னுடைய இதழ்களை அசைத்தாள். அப்போது, லலிதாம்பிகையின் உள் நாக்கில் இருந்து ஒரு தேவி தோன்றினாள்.
கருட வாகனத்தில் அமர்ந்தபடி, கைகளில் சங்கு சக்கரம், சாரங்க வில், வாள், கதை போன்ற ஆயுதங்களைத் தாங்கியவாறு தோன்றிய இந்த தேவி, பராசக்தி லலிதாம்பிகையை வணங்கினாள். அந்த தேவிக்கு வலதுகரம் காட்டி ஆசி வழங்கிய லலிதா திரிபுரசுந்தரி தேவி, “நகுலேஷ்வரி தேவியே! ஆசிகள். சென்று சர்பினி மாயையை வென்று வா’’ என்று உத்தரவிட்டு அனுப்பினாள். வீர ஆவேசத்தோடு கர்ஜனை செய்தபடியே போர்க் களத்துக்குள் புகுந்தாள் நகுலேஷ்வரி தேவி. கருடன் மீது பறந்து வந்த அந்த தேவியின் ஒவ்வொரு பல்லில் இருந்தும் கோடிக்கணக்கான
கீரிப்பிள்ளைகள் தோன்றின.
அந்த கீரிப்பிள்ளைகள் போர்க்களத்தில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த விஷ சர்பங்களை கொன்று ஒழித்தது. அதைக் கண்ட சர்பினி மாயை கோரமாக நகுலேஷ்வரி தேவியை தாக்க வந்தாள். அந்த சர்பினி மாயையின் மீது கருட அஸ்திரத்தை விட்டாள் நகுலேஷ்வரி தேவி. சர்பினி மாயை கருட ஆதிரத்தால் அழிந்து போனாள். பிறகு விளையாட்டாகவே பண்டாசுரனின் ஐந்து படைத்தளபதிகளைக் கொன்றொழித்து, வெற்றிவாகை சூடியவளாக லலிதாம் பிகையின் முன் வந்து நின்றாள் நகுலேஷ்வரி தேவி.
நகுலேஷ்வரி தேவியின் வீர சாகசத்தைப் பெரிதும் வியந்தாள், பராசக்தியான லலிதாம்பிகை. லலிதா பரமேஷ்வரியின், ராஜமந்திரியான, ராஜ சியாமளா தேவி, நகுலேஷ்வரி தேவியின் சாகசத்தை வெகுவாக பாராட்டி, தனது பரிவார தேவதையாக அவளை ஏற்றுக்கொண்டாள். அன்று முதல் அம்பிகையின் மந்திரியான ராஜசியாமளா தேவியின் உபாங்க தேவதையாக நகுலேஷ்வரி தேவி பூஜிக்கப் படலானாள். பிறகு லலிதாம்பிகை பண்டாசுரனை தர்மயுத்தத்தில் சம்ஹாரம் செய்தாள். நகுலி சரஸ்வதி
அல்லது நகுலேஷ்வரி தேவியின் தியானம்;
“விகாஸ பாஜி ஹ்ருத் பத்மே ஸ்திதாம் உல்லாச தாயிநீம்
பர வாக் ஸ்தம்பிணீம் நித்யாம்ஸ்மராமி நகுலீம் சதா”
அதாவது நன்கு மலர்ந்த ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் மீது ஹ்ருதயத்தில் அமர்ந்துகொண்டு அனைத்துக் கேளிக்கை விளையாட்டையும் தந்து எதிரியின் பேச்சுத் திறமையை ஸ்தம்பிக்கச் செய்பவளான நகுலிசரஸ்வதியை தியானிக்கிறேன் என்பது மேலே நாம் கண்ட தியான ஸ்லோகத்தில் தேர்ந்த பொருள்.
நகுலேஷ்வரி தேவியின் தத்துவம்
பண்டாசுரனின் படைத் தளபதிகளான கரண்டன், காகாசிதன், வஜ்ரதந்தன், வஜ்ரமுகன், வஜ்ரலோமன் போன்றோர், மனிதனின் ஐந்து கிலேசங்களை குறிக்கிறார்கள். அதாவது உலக மாயையால் மனிதனுக்கு ஏற்படும் குற்றங்கள் அல்லது ஐந்து தீயகுணங்கள். இந்த ஐந்து அரக்கர்களும், முறையே அறியாமை, அகங்காரம், பேராசை, அவா, கோபம் போன்ற ஐந்து தீயகுணங்களின் வடிவங்கள். இந்த தீயகுணங்கள் ஒரு நல்ல குருவின் ஞான உபதேசத்தைக் கேட்பதன் மூலம் அழிந்து விடுகிறது. அம்பிகையின் உள் நாக்கில் இருந்து உருவாகிய நகுலேஸ்வரி தேவி, ஒரு தேர்ந்த ஞான குருவின், ஞான உபதேசத்தின் வடிவம். ஒரு நல்ல குருவின் உபதேசம், மனிதனின் ஐந்து கிலேசங்களையும் போக்கும் என்பதைத்தான் நகுலேஷ்வரி தேவியின் வரலாறு நமக்கு காட்டுகிறது.
நகுலேஷ்வரியும் கீரிப்பிள்ளையும்
ஞானம் பெற்றாலும், சில தவறுகளை செய்ய வாய்ப்புண்டு. இதற்கு துர்வாசர், விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்களே சாட்சி. பெரும் முனிவர்களான இவர்கள் கோபத்தாலும், ஆசையாலும் தங்கள் தவ வலிமையை இழந்த வரலாற்றை நாம் புராணங்களில் பார்க்கிறோம். இப்படி நிகழும் தவறுகள், நமது ஆன்மிக முன்னேற்றத்திற்குத் விஷம் போன்றவை.
நகுலம் என்றால் கீரிப்பிள்ளை என்று பொருள். எப்படி விஷப்பாம்பைக் கீரிப்பிள்ளைகள் வெல்லுமோ, ஞான மார்க்கத்தில் ஏற்படும் விஷம் போன்ற தடங்கல்களை நகுலி சரஸ்வதி அல்லது நகுலேஷ்வரி தேவியின் அருளால் எளிதில் முறியடிக்க முடியும்.
குண்டலினியும் நகுலேஷ்வரி தேவியும்
குண்டலினி சக்தி என்பது ஒரு பாம்பின் வடிவில், நமது முதுகெலும்பின் கீழே இருக்கும் மூலாதாரம் என்ற சூட்சுமச் சக்கரத்தில் இருக்கிறது. இந்த சக்தி ஒரு பாம்பின் வடிவில் இருக்கிறது. மூலாதாரத்தில் இருக்கும் இந்த குண்டலினி சக்தியைத் தங்கள் யோக சக்தியால் ரிஷி முனிவர்கள் எழுப்பி, உச்சிக் கபாலத்தில் இருக்கும் ஸஹஸ்ரார சக்கரத்திற்கு கொண்டு செல்வார்கள். அங்கே அம்பிகையை உணர்ந்து சிவானந்தத்தில் திளைப்பார்கள்.
இதற்கு “குண்டலினி யோகம்’’ என்று பெயர். எப்படி ஒரு கீரிப்பிள்ளை பாம்பைத் தட்டி எழுப்புமோ. அதுபோல மூலாதாரத்தில், பாம்பின் வடிவில் இருக்கும் குண்டலினியை தட்டி எழுப்ப நகுலி சரஸ்வதி அல்லது நகுலேஷ்வரி தேவியின் அருள் மிக முக்கியம்.நகுலி சரஸ்வதி அல்லது நகுலேஷ்வரி தேவியின் அருளும் வாக்கு சித்தியும்.
நமது கருத்தை மற்றவர்கள் ஏற்கும் படி சொல்வதே வாக்குவாதத்தின் நோக்கம். இன்றும் நீதிமன்றத்தில், வக்கீல் தனது வாதத் திறமையை வெளிப்படுத்துவதும், அதை பொறுத்து வெற்றி தோல்வி அமைவதையும் நாம் காண்கிறோம். ஒருவரோடு வாதாடும் போது, பற்பல கருத்துக்களை நாம், அவர் முன் வைப்போம். அதேபோல எதிராளியும் செய்வார். அப்போது நாம் வாதத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்றால், அந்த எதிராளி நம்முடைய கருத்தை ஒப்புக் கொள்ளும் படி வாதம் செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் எதிராளியின் பேச்சுத் திறமையை நாம், நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படி எதிராளியை வாதத்தில் வெல்ல நமக்கு நகுலி தேவியின் அருள் உதவுகிறது. இன்றும் வழக்கு வியாஜ்ஜியங்களில் கஷ்டப்படுபவர்கள், நகுலி சரஸ்வதி அல்லது நகுலி தேவியின் அருளால் வழக்கில் வெற்றி பெறுவதை கண்கூடாக பார்க்கலாம். (சிலர் நகுலி சரஸ்வதியும் நகுலேஷ்வரி தேவியும் வெவ்வேறு தேவிகள் என்றும் சொல்கிறார்கள்) நகுலி சரஸ்வதி அல்லது நகுலேஷ்வரி தேவியின் மந்திரம்.
நகுலி சரஸ்வதி தேவியின் மந்திரம் முப்பத்தி இரண்டு அக்ஷரங்களை கொண்டது. இந்த மந்திரத்தை ஒரு நல்ல குருவிடம் உபதேசம் பெற்ற பின் ஜபிப்பதே முறை. இப்படி குருவிடமிருந்து உபதேசம் பெற்ற மந்திரத்தை அம்பிகையை மனதில் நினைத்த படி ஜெபித்தால், வாக்கு சித்தி ஏற்படும். நமது கருத்துக்களை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு, இந்த மந்திரத்திற்கு ஒரு பிரயோகம், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த பிரயோகம், நாம் சொல்லும் கருத்து உண்மைக்கு மாறாகவோ, தர்மத்திற்கு எதிராகவோ இருந்தால் பலனளிக்காது. ஆகவே நேர்மையான, தர்மமான கருத்துக்களை நாம் சொல்லி மற்றவரை அங்கீகரிக்க செய்ய மட்டுமே இந்த நகுலி சரஸ்வதி மந்திரத்தை உபயோகிக்கலாம்.இப்படி அநேக விதமான பெருமைகளையும், மகிமைகளையும் உடைய நகுலி சரஸ்வதி அல்லது நகுலேஷ்வரி தேவியை நாமும் வணங்கி வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறுவோம்.
ஜி.மகேஷ்
The post நலன்களை எல்லாம் அருளும் நகுலேஷ்வரி தேவி appeared first on Dinakaran.