×
Saravana Stores

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசல்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

போடி, செப்.25: போடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி நகராட்சி நூற்றாண்டுகளை கடந்த நகராட்சியாகும். இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். போடியில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலையும், சிறு,குறு தொழில்களையும் செய்து வருகின்றனர். மேலும் பலர் கூலித் தொழிலாளிகளாகவும் உள்ளனர். போடியை சுற்றி 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. போடியில் குப்பிநாயக்கன்பட்டியில் இருந்து திருமலாபுரம் வரையிலான சாலையும், போடியில் இருந்து தேனிக்கு தேசிய நெடுஞ்சாலையும், போடியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு மாநில நெடுஞ்சாலையும், போடியில் இருந்து தேவாரம் வழியாக உத்தபாளையத்திற்கு செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையும் உள்ளன. மேலும் போடியில் இருந்து மூணாறுக்கு செல்ல மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளன.

இதில் போடியின் பஸ் நிலையத்தில் இருந்து தேவாரம் செல்லும் சாலையும், மீனாட்சிபுரம் செல்லும் சாலையும், மூணாறு செல்வதற்கான தேவர்சிலை, இந்திராகாந்தி சிலை, ஐந்திராந்தல், கட்டப்பொம்மன் சிலை சாலையும் வணிக நிறுவனங்கள் மிகுந்த சாலைகளாக உள்ளன. இதனால் இச்சாலைகளில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் இச்சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். பெரியாண்டவர் ஹைரோட்டில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி, ஜவுளிக்கடைகள், ஓட்டல்க, மீன்கடைகள், பலசரக்குக் கடைகள், மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனை உள்ளது. காமராஜர் சாலையிலும் பத்திரப்பதிவு அலுவலகம், ஓட்டல்கள், போலீஸ் நிலையம், கோயில்கள், வணிகவளாகங்கள், பூக்கடைகள், தங்கும் விடுதிகள், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளன. இதனால் இச்சாலையும் எப்போதும் போக்குவரத்து மிகுந்ததாக உள்ளது.

இதில் வணிக நிறுவனங்கள், தங்கள் கடைகளுக்கு முன்பாக சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் விளம்பர பலகைகளை வைத்தும், கான்கிரீட் தளங்கள் அமைத்தும் ஆக்கிரமித்துள்ளன. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகளின் வாகனங்கள், அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோரின் வாகனங்கள் செல்ல வழியில்லாத வகையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் இச்சமயங்களில் சாலையை கடக்க பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இச்சமயங்களில் சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் சாலையை கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் அவலம் நீடித்து வருகிறது. ஆகையால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசாரை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி பஸ்நிலையத்திற்குள் போக்குவரத்து காவல்நிலையம் செயல்பட்டு வந்தபோது, போக்குவரத்து போலீசார் போடி நகர முக்கிய சாலைகளில் அடிக்கடி ரோந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீராக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது போக்குவரத்து காவல் நிலையம் போடி நகரையடுத்துள்ள புதூர் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதால் போக்குவரத்து போலீசாரின் ரோந்து பணிகுறைந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு திரும்ப பஸ்நிலையம் வரும் மாணவ, மாணவியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் பஸ்நிலையத்தில் பஸ்களில் ஏற முடியாத அளவிற்கு பஸ் நிலையத்திற்குள்ளும் வாகனங்கள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

இதனால் வாகன ஓட்டுனர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பஸ்களில் இடம் பிடிக்க ஓடிச்செல்லும்போது வாகன விபத்துக்களில் மாணவ, மாணவியர் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே, போடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து போலீசார் மூலம் தீவிர ரோந்தினை அதிகப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டும் என போடி நகர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், போடி நெடுஞ்சாலைத் துறையினரும், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போடி நகராட்சியில் போக்குவரத்து நெரிசல்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா? appeared first on Dinakaran.

Tags : Bodi Municipality ,Bodi ,Dinakaran ,
× RELATED ஆழ்குழாய் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி துவக்கம்