×

முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்து வருகிறார் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திரும்பி போகும் முதலீட்டாளர்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை

மதுரை: ‘தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்வோர் திரும்பி செல்கின்றனர்’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி தாலுகா பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் முட்புதர்கள் மண்டியுள்ளன.

இதனால் நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, போதிய நீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இப்பகுதி மக்கள், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால், வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். எனவே, நீர்வரத்து கால்வாய்களில் உள்ள சீமை கருவேல் மரங்களை வெட்டி அகற்றிடவும், கால்வாய்களை தூர்வார தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சுந்தர்மோகன் ஆகியோர், ‘‘பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொண்டு செய்ய ஆர்வமாக வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசு அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். ஆனால் இங்குள்ள அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்பவர்கள் திரும்பி செல்கிறார்கள். ஏனென்றால், அவர்களிடம் லஞ்சம் பெற முடியாது’’ என்றனர். பின்னர் மனுதாரர், கோரிக்கையின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்து வருகிறார் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திரும்பி போகும் முதலீட்டாளர்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Chief minister ,iCourt ,Madurai ,Tamil Nadu ,Satish ,Ramanathapuram ,
× RELATED முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும்...