காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த சுமார் 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழம்பி சுடுகாடு அருகே ஆலமரத்தடியில் தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரவடிவு தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கீழம்பி சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து, போலீசார் நடத்திய விசாரணையில், கீழம்பி மணக்குள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் அருண்பிரசாத் (23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. உடனடியாக அருண்பிரசாத்தை கைது செய்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், அவரிடமிருந்த சுமார் 1 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அருண்பிரசாத்தை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.