×
Saravana Stores

ஆந்திர மாநில டிஜிபியுடன் அவசர ஆலோசனை; திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் கலப்படம் செய்தவர்கள் யார், இதில் உள்ள உண்மை நிலவரத்தை கண்டறிய தனிப்படை விசாரணை நடத்தும்படி ஆந்திர மாநில டிஜிபியுடன் நடந்த அவசர ஆலோசனையின்போது முதல்வர் சந்திரபாபுநாயுடு உத்தரவிட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யில் மாடு, பன்றிகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இதில் உள்ள உண்மை நிலவரம் என்ன? இதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டறிய வேண்டும் என்று பக்தர்களும் அரசியல் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்று முன்தினம் இரவு டிஜிபி துவாரகா திருமலாராவுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.அப்போது திருமலை ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் எவ்வாறு கலப்படம் நடந்தது? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? இதற்கான பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது தொடர்பான உண்மையை கண்டறிய தனிப்படை அமைத்து விசாரணை நடத்தும்படி முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

குறிப்பாக ஐஜி அல்லது அதற்கு இணையான அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்து இந்த விசாரணையை விரைந்து தொடங்கவேண்டும். உண்மை நிலவரம் பக்தர்களுக்கு தெரிய வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையத்து, குண்டூர் சரக ஐஜி சர்வஸ்ரேஸ்தா திரிபாதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் சரக டிஐஜி கோபிநாத் ஜெட்டி, கடப்பா எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு மற்றும் சில டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாஜி அறங்காவலர் குழு தலைவர் மீது வழக்கு
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான கருணாகர்ரெட்டி நேற்று முன்தினம் திருமலையில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடினார். பின்னர் கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றினார். மேலும் கற்பூரத்தை கையில் ஏந்தி. `நான் தலைவராக இருந்தபோது நெய்யில் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும்’ என உறுதிமொழி எடுத்தார்.

அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார், அவரிடம் திருமலையில் அரசியல் பேசக்கூடாது என்றுக்கூறி அவரை தடுத்து திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திருமலையில் விதிமுறை மீறி அரசியல் பேசியது, பக்தர்களின் மனதை புண்படுத்தியது, சாதி மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் கருணாகர்ரெட்டி மீது திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திர மாநில டிஜிபியுடன் அவசர ஆலோசனை; திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra State DGP ,CM ,Chandrababu Naidu ,Tirupati ,Lattu ,Tirumala ,Chief Minister ,Ladtu Nei ,Tirupati Eyumalayan Temple ,Tirupati Eyumalayan Temple Lattu… ,Tirupati Lattu ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…