ஸ்ரீபெரும்புதூர்: மொளச்சூர் ஊராட்சியில் நீர்வரத்து கால்வாயில் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், கோதுமை குளம் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குளத்தினை தூர்வாரி சீரமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் கோதுமை குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகிலேயே அம்மன் கோயில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் நீராடி வழிபட்டு வந்தனர். நாளடைவில் ஊராட்சி நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாததால், குட்டையில், ஆகாயத்தாமரை, முட்செடிகள் படர்ந்து தற்போது மாசடைந்து காணப்படுகின்றன.
இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக குளத்தில் நேரடியாக கலக்கிறது. மேலும், இறைச்சி கழிவு, உணவு கழிவு, குப்பைகள் குளத்தினை சுற்றி கொட்டப்பட்டு வருவதால், நீர் மாசடைந்து, குளத்தினை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், மாசடைந்த நீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அங்குள்ள குடியிருப்பு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், குளத்தை சீர்மைத்து நீர்வரத்து கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் அகற்றி, குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post நீர்வரத்து கால்வாயில் குப்பை, இறைச்சி கழிவுகள் மாசடைந்து துர்நாற்றம் வீசும் கோதுமை குளம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.