×
Saravana Stores

கான்பூரில் 2வது டெஸ்ட்; ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் பிட்சால் இந்தியாவுக்கு சிக்கல்?

கான்பூர் : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது. இதன் காரணமாக 2 அணிகளுமே 3 வேகப்பந்துவீச்சாளர் வைத்து விளையாடினார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது இந்திய அணி வீரர்களால் ஒரு அளவுக்கு சிறப்பாக விளையாட முடியும் என்ற கணிப்பின் அடிப்படையிலேயே ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் கான்பூர் மைதானத்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பந்தின் பவுன்ஸ் குறைந்த அளவிலே இருக்கும் என்பதோடு, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு அது கூடுதல் சாதகமாக இருக்கும். முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடிக்கும் அணி வெற்றிபெறும். இதேபோன்று போட்டி செல்ல செல்ல ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். மேலும் முதல் 2 அல்லது 3 நாட்களுக்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் தொடரும்.

இதனால் இந்திய அணி மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ்க்கு பதில் அக்சர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டால் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

The post கான்பூரில் 2வது டெஸ்ட்; ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் பிட்சால் இந்தியாவுக்கு சிக்கல்? appeared first on Dinakaran.

Tags : Kanpur ,India ,Bangladesh ,Chennai ,Dinakaran ,
× RELATED துளித் துளியாய்…