×
Saravana Stores

யானைகளின் உணவுக்காக 160 ஹெக்டேரில் புல், மூங்கில்

*தர்மபுரி வனப்பகுதியில் சாகுபடி செய்ய திட்டம்

தர்மபுரி காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில், யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியில், 160 ஹெக்டேர் பரப்பளவில் யானைகளுக்கு தேவையான புல், மூங்கில் உள்ளிட்ட தீவனம் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறை சார்பில், அப்பகுதியில் உள்ள வேலி முட்செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.

தர்மபுரி வனமண்டலத்தில் காவேரி தெற்கு மற்றும் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் உள்ளது. இவை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இணைந்த நிலையில் உள்ளன. இந்த வன உயிரின சரணாலயங்கள், கர்நாடக மாநிலத்தின் காவேரி வன உயிரின சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் உள்ளது. இந்த சரணாலயத்தில் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனசரகங்களில் யானைகள் அதிகம் உள்ளன.

கடந்த மாதம் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச்சரகத்தில் 64 யானைகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் யானைகள் காப்புக்காட்டிலிருந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் அவ்வப்போது நுழைந்து, பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு, காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, இரவு ரோந்து பணி மேற்கொள்ள 150 எண்ணிக்கையில் டார்ச் லைட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மனித-விலங்கு மோதல்களை தடுக்கும் வகையில், கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க, வனப்பகுதியை ஒட்டிய கிராம எல்லைகளில் சூரிய தொங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, பாலக்கோடு அருகே தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை, ஒற்றை யானை மிதித்து கொன்றது.

இந்நிலையில், தர்மபுரி வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில், காடுகளில் வேலி முட்செடிகள் (விஷ முட்செடிகள்), அன்னிய களைச்செடிகள் அதிகம் உள்ளன. இவற்றை அகற்றி விட்டு, யானைகளுக்கு தேவையான தீவன பயிர்கள், செடிகள் பயிரிட வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில், பாலக்கோடு வனச்சரகத்தில் 100 ஹெக்டேரிலும், ஒகேனக்கல், பென்னாகரம் வனச்சரகங்களில் 60 ஹெக்டேரிலும் வேலி முட்செடிகள், தேவை இல்லாத களைச்செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணிகளில் மலை மற்றும் வனக்கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். முட்செடிகள், களைச்செடிகளை அகற்றிய பின்னர், யானை மற்றும் வனவிலங்களுக்கு தேவையான புல், மூங்கில், விதை மற்றும் தீவன செடிகள் நடப்பட உள்ளது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், ‘காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில், யானைகள் அதிக நடமாட்டம் உள்ளன. இந்த யானைகள் வனத்தை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிலையை மாற்ற, யானைகளுக்காக தீவன புல், மூங்கில், செடிகள் நடப்பட உள்ளது. இதற்காக காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் 160 ஹெக்டேர் பரப்பளவில் வேலி முட்செடிகள், களைச்செடிகள் அகற்றும்பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர், தீவன செடிகள் பயிரிடப்படும்,’ என்றார்.

The post யானைகளின் உணவுக்காக 160 ஹெக்டேரில் புல், மூங்கில் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri forest ,Dharmapuri Kaveri South Wildlife Sanctuary ,Palakodu ,Okenakal ,Bennagaram forest ,
× RELATED போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி திடீர் ஆய்வு