- திருப்பதி
- ஏழுமலையான் கோவில்
- திருமலா
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- லத்து பிரசாத்
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- Lattu
- ஏழுமலையான் கோவில்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததால், தோஷ நிவர்த்தி யாகம் நடந்தது. தொடர்ந்து கோயில் முழுவதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்ட லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டு கொழுப்பு உள்ளிட்டவை கடந்த ஆட்சியில் கலப்படம் செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். இதுதொடர்பாக குஜராத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஏழுமலையான் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இதற்கு பரிகாரம் செய்ய சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடத்த ஆலோசகர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர் தலைமையில் 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் இந்த யாகம் நடந்தது. கோயிலில் உள்ள தங்க கிணறு அருகே பழைய உண்டியல் காணிக்கை எண்ணும் மண்டபத்தில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதற்காக 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது. வாஸ்து யாகம் உள்ளிட்ட சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடந்தது. இதில் வைக்கப்பட்ட புனித நீர் மூலவர் சந்நிதி, லட்டு, அன்னப்பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு விற்பனை செய்யக்கூடிய கவுன்டர்கள், பூந்தி தயாரிக்கும் மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்து வழங்கிய நிறுவனம் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த (கேஎம்எப்) நந்தினி மற்றும் அல்பா நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. எனவே பக்தர்கள் இந்த விவகாரத்தில் எந்தவித சஞ்சலமும் கொள்ள வேண்டாம். பழையபடி பிரசாதம் அதே புனித தன்மையுடன் வழங்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 பேருடன் கூடிய ஆய்வக நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆய்வகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேசிய பால்வள வாரியம் மூலம் (என்.டி.டி.பி) ரூ.75 லட்சம் மதிப்புள்ள துல்லியமான பரிசோதனை செய்யும் கருவிகளை நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.அதனை விரைந்து வழங்கும்படி கேட்டுள்ளோம். எனவே டிசம்பருக்குள் இந்த ஆய்வகம் அமைக்கப்படும். மேலும் திருமலையில் உணவு தர பரிசோதனை ஆய்வகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்: மாலை 6 மணிக்கு பக்தர்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் நமோ வெங்கடேசயா எனும் பாவமன்னிப்பு மந்திரங்களை உச்சரித்து சுவாமி அருள் பெறலாம் என்று கோயில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
The post திருப்பதியில் லட்டு பிரசாதம் நெய்யில் கலப்பட விவகாரம்: ஏழுமலையான் கோயிலில் 4 மணி நேரம் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம்; கோயில் முழுவதும் புனிதநீர் தெளித்தனர் appeared first on Dinakaran.