×
Saravana Stores

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தண்டையார்பேட்டை: திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது, என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். சென்னை வடக்கு மாவட்டம், ஆர்கே நகர் மேற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, ஜே.ஜே.எபினேசர் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ‘2026ம் ஆண்டு தேர்தலில் பல சக்திகள் பல முயற்சிகள் செய்து கூட்டணியில் பிளவு ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். மு.க.ஸ்டாலின் நம்மோடு இருக்கக்கூடிய கூட்டணி தெளிவாக இருப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. நமது கட்சிக்காரர்கள் ஒன்றாக இருந்தால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் சர்வே ரிப்போர்ட் எடுத்துள்ளனர். அந்த சர்வேயில் 100 சதவீதத்திற்கு 54 சதவீதம் பேர் முக ஸ்டாலின் ஆட்சி சிறந்த ஆட்சி என்றும், 17 சதவீதம் பேர் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் மீதமுள்ள 29 சதவீதம் பேரை மாற்றுவதற்கு முயற்சி செய்தால் எந்த சக்தியாலும் நமது தலைவரையும், திமுகவையும் தொட்டுப் பார்க்க முடியாது. ஒன்றாக இருந்த அதிமுகவை ஜெயிச்சுதான் ஆட்சி அமைத்தோம். அதிமுக ஒன்றிணைந்தாலோ, பிளவுபட்டாலோ அதுபற்றி கடுகளவுகூட கவலைப்படும் கட்சி திமுக இல்லை. அடுத்து தன்மீது வழக்கு வரும் என்ற பயத்தில் ஓபிஎஸ் முந்திக்கொண்டு பேசி வருகிறார். யார் யார் ஊழல் செய்தார்களோ அவர்கள் மீது வழக்கு வரும். எடப்பாடி பழனிசாமி அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக கூறுகிறார்.

அம்மா உணவகத்தை மூடச் சொன்னவரை கட்சியில் இருந்து நீக்கியவர்தான் மு.க.ஸ்டாலின். அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட நிதி ஒதுக்கியுள்ளார். 2019ல் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். திமுக கூட்டணியில் எந்த பிளவுமும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்,’ என்றார். தொடர்ந்து ராயபுரம் கிழக்கு பகுதி சார்பில் எஸ்என் செட்டி தெருவில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்திற்கு ராயபுரம் கிழக்குப் பகுதி செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்டி சேகர், சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

The post திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,RSBharti ,Thandaiyarpet ,DMK ,RS Bharti ,Chennai North District, RK Nagar West Region ,Netaji Nagar, Thandaiarpet ,RS Bharati ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணி வலுவாக உள்ளது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!