×

மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 355 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்க நாணயம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரியம் மூலம் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் கல்வி உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு பாதுகாவலர் நியமன சான்று, 3 பயனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் திருமண நிதி உதவி, 4 பயனாளிகளின் குடும்பத்தினருக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பீட்டில் ஈமச்சடங்குக்கான நிதியுதவி, 5 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பீட்டில் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளி பணி செய்யும் இடத்தில் விபத்தில் மரணமடைந்தவரின் மனைவிக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகைக்காக காசோலை வழங்கப்பட்டது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் வகுப்பை சார்ந்த 40 கிறித்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகளுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.3.38 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி,

மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் வேலாயுதம், உதவி ஆணையர் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, தொழிலாளர் உதவி ஆணையர் செண்பகராமன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர் பிரபாகர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,People's Grievance Day ,District Collector ,Arunraj ,
× RELATED பிச்சம்பட்டி பகுதியை ஒட்டி சாலையோரம்...