- ஊனமுற்றோர் நலத்துறை
- காஞ்சிபுரம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- உலக சைகை மொழி தினம்
- சர்வதேச காது கேளாதோர் தினம்
- ஊனமுற்றோர் நலத்துறை
- காஞ்சிபுரம் மாவட்டம்
- சைகை மொழி
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உலக சைகை மொழி தினம், சர்வதேச காது கேளாதோர் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், உலக சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது
இந்த, பேரணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: ஒவ்வொரு வருடமும் உலக சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினம் செப்டம்பர் மாதம் 23ம்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் நேற்று (23.9.2024) முதல் 29.9.2024 வரை 7 நாட்களும் சர்வதேச காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக கொண்டாடப்பட உள்ளது.
அனைத்து செவித்திறன் குறையுடைய மற்றும் வாய்பேச இயலாத பள்ளி குழந்தைகள், சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சைகை மொழி தின வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். உலகளவில் சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் மாற்றுத்திறனாளிகளை சராசரி மனிதனைபோல் சமமாக நடத்தப்பட வேண்டும்.
இங்கு கூடியிருக்கும் அரசு அலுவலர்கள், தங்களது அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படையான மற்றும் அன்றாட தேவைகளை புரிந்துக்கொள்ளும் வகையில், எளிமையான சைகை மொழி பற்றி அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஊக்குவிக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களை ஒன்றிணைத்து சைகை மொழிகளை புரிந்துகொண்டு சமூகத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமமாக நடத்திட உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அரசு காதுகேளாதோருக்கான பள்ளி மாணவ-மாணவிகள், காதுகேளாதோர் சங்க உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக சைகை மொழி, காது கேளாதோர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.