- திருப்பதி
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- முதல் அமைச்சர்
- சிறப்பு விசாரணை குழு
- திருப்பதி ஈழமாலயன்
திருமலை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி பெறப்பட்ட நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.
இந்நிலையில், திருப்பதியில் நடந்த கலப்பட நெய் முறைகேடு அராஜகம் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்க ஆந்திர மாநில ஐ.ஜி. மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என உறுதி அளிக்கிறேன். மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு கோவிலிலும் மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்வோம்.
அனைத்து கோவில்கள், மசூதிகள் தேவாலயங்களில் மத நல்லிணக்கம் பேணப்பட வேண்டும். எந்த மதத்தின் ஆலயமும் அந்தந்த மதத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசாட்சியின்போது முறைகேடுகள் நடந்துள்ளன என கூறியதுடன், இந்த செயல்முறையை தூய்மைப்படுத்த போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் திருமலையில் புனிதமற்ற பல விசயங்கள் நடந்துள்ளன என்றும் கூறியுள்ளார்.
The post திருப்பதி லட்டு சர்ச்சை.. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு: சந்திரபாபு நாயுடு பேட்டி!! appeared first on Dinakaran.