சென்னை: சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தாம்பாம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை இன்று (செப்.22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுவதுமாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பொது போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் என இந்த ரயில் சேவையை நம்பியுள்ளனர். பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை அவ்வப்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் முழுவதுமாக அல்லது பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று 22ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்ல வேண்டிய ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
The post சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.