- அமைச்சர்
- தமோ அன்பரசன்
- எடப்பாடி
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- ஏஎம்எம்ஏ
- ஆலந்தூர்
- வானுவம்பேட்டை
- தொகுதியில்
- தம்மோ.அன்பரசன்
- தின மலர்
சென்னை: ஆலந்தூரில் அம்மா உணவகத்தை மூடிவிட்டு அரசு பள்ளி நடத்துவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வாணுவம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை மூடிவிட்டு அரசு பள்ளி இயங்கி வருவதாகவும், அப்பள்ளி மாணவர்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். வாணுவம்பேட்டை புதுத் தெருவில் சென்னை தொடக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அப்பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருந்ததால் அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் துவங்கப்பட்டது. தற்போது அந்த வளாகத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையமும் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை தொடக்க பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 65 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அங்கன்வாடியில் 25 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி இப்பள்ளியை இடித்து விட்டு, ரூ.1.42 கோடியில் 2 அடுக்கு தளம் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு பயிலும் மாணவ, மாணவியரின் வசதிக்காக இப்பள்ளி வளாகத்தில் நல்ல நிலையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் போதிய இட வசதி உள்ளதால் தற்காலிகமாக சென்னை தொடக்க பள்ளி இயக்கப்பட்டு வருகிறது இதனை மேலோட்டமாக பார்த்த அப்பகுதியில் உள்ள அதிமுகவினர் கட்டுக்கதை விட்டு தலைமைக்கு தகவல் தந்துள்ளனர். இந்த அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இது மட்டும் இல்லாமல் அருகில் பணியாற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்களும் அங்கு உணவருந்தி வருகின்றனர்.சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். உண்மை நிலை இப்படி இருக்கையில் அடிமட்டத்தில் உள்ள அதிமுகவினர் அம்மா உணவகத்தில் பள்ளி நடப்பதாக கட்டுக்கதை விட்டு தலைமைக்கு தகவல் தந்ததை தீர விசாரிக்காமல் மக்கள் மத்தியில் அம்மா உணவகங்களை மூடுவது போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இருக்கின்ற உண்மை நிலை என்ன என்று அறியாமல் ஒரு பொய்யான அறிக்கையை வெளியிடுவது முன்னாள் முதல்வருக்கு அழகு அல்ல. இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
The post உண்மை நிலை தெரியாமல் அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக அறிக்கை விடுவதா? எடப்பாடிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்டனம் appeared first on Dinakaran.