இம்பால்: இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளதால், பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கடந்த ஓராண்டாக இரு குழுக்களுக்கு இடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இந்தியா – மியான்மர் நாட்டின் மணிப்பூர் எல்லையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இதுதான் மணிப்பூரில் இனக்கலவரத்திற்கு மூல காரணம் என்று கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
இந்நிலையில் மியான்மரில் இருந்து ஆயுதமேந்திய குழுக்களை சேர்ந்த சுமார் 900 பேர் மணிப்பூருக்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் பெரிய தாக்குதல் சம்பவங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவு அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங்கும் கூறுகையில், ‘மியான்மரில் இருக்கும் குக்கி தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மியான்மரை ஒட்டியுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மியான்மரில் இருந்து ஊடுருவிய இந்த தீவிரவாதிகள், ட்ரோன்களை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
எனவே உளவுத்துறை அறிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளுக்கும் உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதிகள் 30, 30 பேர் கொண்ட குழுக்களாக மாநிலம் முழுவதும் பரவ திட்டமிட்டுள்ளனர். அதன்பின் செப்டம்பர் கடைசி வாரத்தில் மெய்தீஸ் இன மக்கள் வசிக்கும் கிராமங்களை குறிவைத்து தாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஊடுருவிய ஆயுதமேந்திய குழுக்கள், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் குழுக்களாகும். இந்திய எல்லையோரப் பகுதிகளைச் சேர்ந்த மியான்மர் நாட்டின் ராணுவ வீரர்கள் தப்பித்து இந்தியாவுக்கு வர முயற்சிக்கின்றனர்.
அவர்களைத் துரத்தும்போது, ஆயுதமேந்திய தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் வன்முறையில் அன்னிய சக்திகளுக்கும் பங்கு உண்டு. எனவே மியான்மரில் இருந்து ஊடுருவியவர்களால் தான் மணிப்பூரில் வன்முறை அதிகம் நடக்கிறது. அதனால் மணிப்பூரின் சுராசந்த்பூர், ஃபெர்ஜோல், தெங்னோபால், கம்ஜோங், உக்ருல் ஆகிய மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.
The post இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார் appeared first on Dinakaran.