கோவை: கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆல்வினை நள்ளிரவில் போலீஸ் துப்பாக்கியால் சுட்டிப் பிடித்தனர். குற்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த ரவுடி ஆல்வினை போலீஸ் தேடி வந்தது. கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் அங்கு விரைந்தனர்.
நள்ளிரவு 2.30 மணிக்கு ரவுடி ஆல்வினை பிடிக்க முயன்றபோது அவர் கத்தியால் தாக்கியதில் தலைமைக் காவலர் படுகாயம் அடைந்தார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி ஆல்வின் படுகாயம் அடைந்தார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் இரண்டு கால் முட்டிகளிலும் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். தற்பொழுது ஆல்வின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரவுடிதாக்கியதில் காயமடைந்த தலைமைக் காவலர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது; 3 கொலை, 2 கொலை முயற்சி ஆகிய வழக்குகள் ஆல்வின் மீது உள்ளன. “குற்றவாளிகள் மற்றும் ரவுடிசத்தை கட்டுப்படுத்துவதற்கு காவலர்கள் துப்பாக்கி எடுத்து செல்வது ‘Part of the Duty’ ஆகும். காவல்துறை கண் எதிரே கொலை போன்ற பெரிய குற்றங்கள் நடக்கக் கூடாது, அப்படி நடக்கும் சமயங்களில் காவலர்கள் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
பயங்கர குற்றவாளிகளை நோட்டம் விடும் போது காவலர்கள் தங்களுடைய தற்காப்புக்காகவும் துப்பாக்கியை எடுத்து செல்கின்றனர். துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் எடுத்து செல்வதில்லை. ஆனால் காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை தாண்டி , காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுக்க தயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.