×

தொழிலதிபரை துப்பாக்கி முனையில் பாஜ கொடி கட்டிய காரில் கடத்தல்: 2 பேர் கைது, துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், நாலாட்டின்புதூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். நேற்று காலை தனது பைக்கில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். பெத்தேல் என்று பகுதியை அருகே வந்த போது பின்னால் 2 கார்களில் வந்த நபர்கள், முத்துக்குமாரை காரில் கடத்தினர். அவர் கூச்சலிட்டதால் அவ்வழியாக பைக்கில் வந்த நாலாட்டின்புத்தூர் எஸ்ஐ அருள்சாம்ராஜ், ஏட்டு பாண்டித்துரை ஆகியோர் காரை சுமார் 5 கிலோ மீட்டர் பைக்கில் விரட்டிச் சென்று கோபாலபுரம் விலக்கு – இடைசெவல் இடையே பாஜ கொடிய கட்டிய ஒரு காரை மடக்கி பிடித்தனர்.

அந்தக் காரில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கு வழங்கப்படும் கார் பாஸ் ஒட்டப்பட்டுள்ளது. காரை நிறுத்தியதும் அதன் டிரைவர் தப்பியோடி விட்டார். மற்றொரு கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்று விட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட காரில் சென்று பார்த்த போது நெல்லை செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (46), தூத்துக்குடி விஇ ரோட்டைச் சேர்ந்த செல்வகுமார் (65) ஆகிய இருவரும் முத்துக்குமாரை காரில் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து முத்துக்குமாரை மீட்ட போலீசார், காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் வாக்கி டாக்கி, துப்பாக்கி ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் வாக்கி டாக்கி, துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஐயப்பன், செல்வகுமார், முத்துக்குமாரை ஆகியோரை நாலாட்டின்புத்தூர் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது முத்துக்குமார் தனது பெட்ரோல் பங்க்கை வேறு ஒருவருக்கு விற்று பணம் வைத்திருப்பதை தெரிந்து கொண்ட, அவரது உறவினரான கழுகுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் தூண்டுதலின்பேரில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஐயப்பன், செல்வகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார், மற்றொரு காரில் தப்பிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

The post தொழிலதிபரை துப்பாக்கி முனையில் பாஜ கொடி கட்டிய காரில் கடத்தல்: 2 பேர் கைது, துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Muthukumar ,Kovilpatti Pasuvanthanai Road ,Thoothukudi district ,Naladinputhur ,Bethel ,Dinakaran ,
× RELATED தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது