×
Saravana Stores

பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பால் மோதல்: லெபனானை நேரடியாக தாக்கியது இஸ்ரேல்: காசாவை தொடர்ந்து விரிவடைகிறது போர்

பெய்ரூட்: பேஜர், வாக்கி டாக்கி வெடித்ததை தொடர்ந்து இஸ்ரேல், லெபனான் இடையே பயங்கர போர் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் நேரடியாக கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். காசாவை தொடர்ந்து லெபானானிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காசா போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருந்த லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா போராளிகள் மீது மின்னணு போரை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் லெபனான் மற்றும் சிரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தான் இந்த தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குழுவினர் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கூறுகையில்,’ இஸ்ரேல் சிவப்பு எல்லையை கடந்துவிட்டது. நாங்கள் இன்னும் வலுவுடன் திரும்பி வருவோம்’ என்று எச்சரித்தார். அதை தொடர்ந்து இஸ்ரேல் மீது நேரடியாக ஹிஸ்புல்லா குழுவினர் தாக்குதல் நடத்தினார்கள். டிரோன்கள் மற்றும் ராக்கெட்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டன. கடந்த 2 நாட்களாக நடக்கும் தாக்குதலால் இஸ்ரேல் எல்லைப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் மற்றும் இஸ்ரேல் போர் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு நேற்று இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. நேற்று முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தின. வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹிஸ்புல்லா குழுவினர் 140 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கும், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதற்கும் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் காசாவை தொடர்ந்து இருநாடுகள் இடையே நேரடியாக போர் தொடங்கியது. லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதியை இஸ்ரேல் போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தின. தொடர்ந்து அந்த பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அனைத்து பகுதிகளும் தீப்பிழம்பாக காட்சி அழித்தன. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டிரோன்கள் மூலமும் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது. தெற்கு லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அது தெரிவித்துள்ளது.

கத்யுஷா ராக்கெட்டுகளுடன் எல்லையில் உள்ள ஹிஸ்புல்லா குழுவின் பல தளங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. விமானப்படை, ராணுவப்படை உள்ளிட்ட இஸ்ரேலின் அத்தனை படைகளும் முதன்முறையாக லெபனான் மீது நேற்று நேரடி தாக்குதல் நடத்தின. பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதிலுக்கு லெபனான் தரப்பில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் எல்லைப்பகுதியில் உள்ள கோலன் ஹைட்ஸ், சபேட் மற்றும் அப்பர் கலிலி ஆகிய பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பல ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் குடியிருப்பு பகுதியில் தாக்கியது. இதனால் இஸ்ரேல் தரப்பிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கோலன் ஹைட்ஸ் மற்றும் வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. லெபனான் மீத தாக்குதல் நடத்தி வரும் அதே வேளையில் காசாவையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. இதில் 15 பேர் காசாவில் கொல்லப்பட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பால் மோதல்: லெபனானை நேரடியாக தாக்கியது இஸ்ரேல்: காசாவை தொடர்ந்து விரிவடைகிறது போர் appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza ,Beirut ,Lebanon ,Palestinians ,Gaza war ,Dinakaran ,
× RELATED சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி படுகொலை